ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை VI

அத்தியாயம் 22

“நீங்க பாண்டிச்சேரி ஊரில்லையோ?” என்றார் பெரிய இசைவாணர். எங்களை எப்போது பார்த்தாலும் எங்களை அவர் இந்தக் கேள்வி கேட்பது வழக்கம். நாங்கள் எவ்வளவு முறை எங்களுக்குப் பாண்டிச்சேரி பூர்வீகம் கிடையாதென்றும் என் வேலை நிமித்தமாக நாங்கள் அங்கு சென்றிருந்தோம் என்றும் கூறியிருந்தாலும் அவர் மனதில் சுத்தமாகப் பதிவாகவில்லை. எங்களை எப்போது பார்த்தாலும் எங்களை அவர் இந்தக் கேள்வி கேட்டு விடுவார். எங்களையும் பாண்டிச்சேரியையும் ஒன்றாக மனதில் உறைய வைத்திருந்தார் அவர். என்ன முயன்றும் அதை அவர் மனதிலிருந்து இளக்க முடியவில்லை.
இசைவாணருக்கும் பெரிய இசை வாணருக்கும் ஒப்புமை நோக்கும் போது பெரிய இசைவாணரை இன்னமும் சாத்வீகமானவர் என்று தான் சொல்ல வேண்டும். மழலை மேதை என்று அறியப் பட்டிருந்ததாலோ என்னவோ இசைவாணரிடம் இருந்த வித்தை போதாமை உணர்வு இவரிடம் கிடையாது. பெரிய சங்கீத விற்பன்னர் என்றும், வாக்கேயக்காரர் என்றும் அறியப்படுபவர் ஆதலால் தன் வித்தையைப் பற்றிய தன்னம்பிக்கையின்மையோ தாழ்வு மனப்பான்மையோ இவரிடம் கிடையாது என்பதே உண்மை. ஆரம்ப நாட்களில் இவர் ஆதித்யாவைத் தன் பிள்ளை போலவே நடத்தி வந்தார். ஒரு முறை இவரின் கச்சேரி ஒரு கோயில் வளாகத்தில் நடக்க ஏற்பாடாகி இருந்தது. அப்போது ஆதித்யா இசைவாணரின் வீட்டில் தங்கி வந்த நேரம். இந்தக் கச்சேரிக்கு ஆதித்யாவை அழைத்துப் போயிருக்கிறார்கள். அவன் கையில் ஒரு கஞ்சிராவை வைத்துக் கொண்டு கச்சேரியில் வாசிக்க வேண்டுமென்று அடம் பிடித்திருக்கிறான். பெரிய இசைவாணர் அவன் பக்கத்தில் நின்று கொண்டு இயலாமையை எடுத்துச் சொல்லி அவனிடம் மன்றாடிச் சமாதானம் செய்திருக்கிறார். பக்கத்தில் இதை கவனித்துக் கொண்டிருந்தவர்கள் ஆதித்யா அவருடைய பிள்ளை என்று நினைக்க ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. இதிலிருந்து பெரிய இசைவாணர் அவன் மீது விசேஷப் பரிவு கொண்டு அவனை நடத்தி வந்தார். அவர்கள் வீட்டில் அவன் எங்கு வேண்டுமானாலும் ஸ்வாதீனமாக நடமாடலாம். ஃபிரிட்ஜைத் திறந்து சாக்லேட்களை எடுத்து மெல்லலாம். இது போன்ற விஐபி மரியாதை அவர்கள் வீட்டில் ஆதித்யாவுக்கு ஏற்கெனவே இருந்து வந்தது. அந்த மரியாதையில் எள்ளளவும் குறையில்லாது அவர் எங்களை வரவேற்றார்.
“என்ன பண்ணின்டிருந்தேள் இவ்வளவு நாளா?” என்றார் புன் சிரிப்போடு. இசைவாணர்களை விட்டதிலிருந்து அன்று வரை என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தோம் என்பதை விளக்கினோம். பெரிதாகச் சொல்லவும் ஒன்றுமில்லை. இசை சம்பந்தமான வலைப்பூவில் ஆதித்யா பற்றி எழுதியதற்காக மிகவும் கோபித்துக் கொண்டார். “என் சிஷ்யா யாராவது பண்றாளா இந்த மாதிரி வேலையெல்லாம்?” என்றார்.
“ஒண்ணுமே நடக்கலைங்கற விரக்திலே தான் சார் அப்படிப் பண்ணினேன்” என்றேன் நான் குற்றவுணர்வுடன்.
“டெஸ்பரேஷன் வில் லீட் யூ நோ வேர். அவனுக்கு என்ன பெரிய வயசாயிடுத்துன்னு இப்படி அவசரப் படறேள்?” என்றார். நாங்கள் என்னத்தைச் சொல்ல?
இது நடந்தது 2005 இல். ஆச்சரியகரமாக 2005 இறுதியுடன் என் பாண்டிச்சேரி அலுவல் முடிந்துவிட்டது. 2006 இல் எனக்குச் சென்னை மாறுதல் ஆகி விட்டது. வங்கியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்குத் தேர்வாகி உழியர்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஆனேன். 2005 நடுவிலிருந்து 2016 வரை ஆதித்யா பெரிய இசைவாணரிடம் தான் சிஷ்யனாக இருந்தான். இந்த பத்து வருட காலத்தில் பெரிய இசைவாணர் ஒன்றுமே செய்யாமல் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ஆதித்யாவிற்குப் பின் வந்த சில மாணவ மாணவிகள் நிறைய இடங்களில் கச்சேரி செய்து கொண்டு நல்ல செயலாக வந்து விட்டார்கள். அங்கே முதல் பரிசு. இங்கே பாராட்டு. அங்கே விருது. கொடி கட்டிப் பறக்கிறார்கள்.
பெரிய இசைவாணர் நடத்தும் வகுப்புகளைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். அவரைப் பற்றியும் நிறையச் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த வகுப்புகளில் வயதான மாமிகளிலிருந்து சின்னஞ்சிறு சிறார் வரை மாணவ மாணவிகள் உண்டு. அவர் எல்லோரையும் ஒன்றாக அமர்த்தி வைத்து வகுப்புகள் எடுப்பார். அதில் வாய்ப்பாட்டு பாடுகிறவர்கள் தவிர அவர் வாசிக்கின்ற தந்தி வாத்யக் கருவியைக் கற்றுக் கொள்கிற மாணவர்களும் அடக்கம். ஏதாவது ஒரு கீர்த்தனையைக் கற்றுக் கொடுப்பார். அதற்காக ஸ்வரப் படுத்திய காகித நகல்கள் எல்லோருக்கும் வழங்கப்படும். எல்லோரும் மின்னணுப் பதிவுக் கருவி வைத்திருப்பார்கள். அதில் ஒலிப் பதிவு செய்து கொண்டு வீட்டில் பயிற்சி செய்து கொள்ளவேண்டியது தான்.
வகுப்புகள் சிலருக்கு மிகவும் முனைப்பாக நடக்கும். அவர்கள் அதைப் பெரிய இசைவாணரிடம் தூண்ட என்ன வித்தை செய்கிறார்கள் என்பது புரியாத புதிர் தான். ஆரம்ப நாட்களில் அவரின் அண்மையில் இருந்த சிலர் என்னை மிகவும் வசீகரித்தார்கள். குறிப்பாக வழுக்கைத் தலையுடன் கூடிய கணக்காயர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர் பிள்ளை பெரிய இசைவாணரிடம் வாத்யம் வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்தான்.
அவர் வரும் போதே கையில் ஒரு ஊக்க பானக் கோப்பையை ஆர்டர் செய்து வாங்கி வருவார் இது பெரிய இசைவாணருக்குப் பிடிக்கும் என்பதால். அவர் வகுப்புகள் முடிந்தவுடன் கிளம்ப மாட்டார். முன் வந்து பின் செல்பவர். வகுப்புகள் ஆரம்பிக்கும் முன்னாலேயே வந்து பெரிய இசைவாணரிடம் பேசிக் கொண்டிருப்பார். கணக்காயர் என்பதால் பெரிய இசைவாணரின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அது சம்பந்தமான சம்பாஷணைகள் அவர்களுக்குள் நடக்கும். வசதியானவர்கள் செல்லும் ‘ஜிம்’ பற்றி இருவரும் பேசிக் கொள்பவார்கள். “அந்த ஷூஸ் வேண்டாம்: ‘நைக்’ வாங்குங்கோ” என்று பரிந்துரை செய்வார் வழுக்கை மண்டையர். பெரிய இசைவாணர் கிரிக்கெட் ஆட வேண்டுமென விருப்பப் பட்டால் அதற்கு ஏற்பாடுகள் செய்வார்.

இந்த அன்பர் போன்றவர்கள் பெரிய இசைவாணரை நாங்கள் நெருங்கவே விட மாட்டார்கள். சுற்றிச் சுற்றி வருவார்கள். அப்படி அரண் போல் சூழ்ந்து கொள்வார்கள். எங்களைப் பார்த்தாலே “இவர்கள் எதற்கு வருகிறார்கள்?” என்கிற கேள்விக்குறி கண்களில் தெரியும். துச்சமாகப் பார்ப்பார்கள். பெரிய இசைவாணரைப் பொறுத்த மட்டில் கொஞ்சம் தர்ம சங்கடம்தான். வருகின்ற மாணவர்களில் பெற்றோரால் நிறையக் காரியங்கள் ஆக வேண்டியிருந்ததால் அவர்களின் முக்கியத்துவம் முதன்மையாக இருக்குமாறு பார்த்துக் கொள்வார். வகுப்புகளைப் பொறுத்த மட்டில் சீரான வகுப்புகள் என்று சொல்ல முடியாது. தோன்றிய நேரத்தில் தோன்றிய படி நடக்கும். பெரிய இசைவாணரின் கண் திருஷ்டி எந்த நேரத்தில் எவர் மீது படும் என்று சொல்ல முடியாது என்பதால் எல்லா மாணவர்களுமே அதை ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருப்பார்கள். காற்று வீசுகிற பக்கம் அதிர்ஷ்ட திசை என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.
ஆதித்யாவைப் பொறுத்த வரை ஆரம்பத்தில் எல்லாம் வகுப்புகளின் ஆரம்பத்தில் வெறுமனே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான். சில சமயங்களில் தனியாகப் போய் நாற்காலியில் உட்கார்ந்திருப்பான். பெரிய இசை வாணர் புன்சிரிப்புடன் அவனை வந்து அமர்ந்து பாடச் சொல்லுவார். உட்கார வைக்கும் வித்தை அவருக்குத் தெரியும். நாம் கொஞ்சம் பதற்றமாகி ஆதித்யாவிடம் போய் வற்புறுத்த எத்தனித்தால் அவர் கையமர்த்தி விடுவார். “நீங்க ரிலாக்ஸ் பண்ணுங்கோ; நான் பாத்துக்கறேன்”. பாடம் நடக்கும். அவர் வாய்ப்பாட்டாகவும் பாடுவார். வாத்யத்தையும் அவ்வப்போது வாசிப்பார். பாடல் கனிந்து நிரவல் கற்பனாஸ்வரம் வரும்போது ஆதித்யா வந்து உட்காருவான். இருவரும் மாறிமாறி அம்பு எய்வது போல் ஸ்வரப் பின்னல்களால் பொருது கொள்வார்கள். நல்ல விறுவிறுப்பாக இது ஒரு பதினைந்து நிமிடம் ஓடும். ஆதித்யா முத்தாய்ப்பை வைத்து முடிப்பான். அவரும் பதில் வாசித்து விட்டு “வெரி குட் ஆதித்யா” என்று முடித்திடுவார். ஆதித்யாவின் வகுப்பு அத்துடன் முடிவடைந்து விடும்.
“அவன் பாடணும்னு அவசியம் கிடையாது. கேட்டுண்டு இருந்தான்னாப் போதும்” என்பார். அவர் மாணவர்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வேறு ஒரு குருநாதரையும் சிபாரிசு செய்து அவர்களிடமும் அவர்கள் போய் வந்து கொண்டிருந்தார்கள். அந்தக் குறிப்பிட்ட மாணவர்களைத் தான் கச்சேரி செய்யும் போது பின்புறம் தம்புரா போடுவதற்கோ பின்பாட்டுப் பாடுவதற்கோ அமர்த்திக் கொள்வார். இதெல்லாம் எங்களுக்குப் பெரிய குறையாக இருந்தது. ஆதித்யாவிற்கு என்ன ஏற்பாடு என்கிற கேள்வி எங்களை எப்போதும் போல் குடைந்து கொண்டிருந்தது. அவருடைய பிரதான சிஷ்யை ஒரு பெண் ( பின்னாளில் அவர் உறவினரையே திருமணம் செய்து கொண்டார் அவர்) “சார் மனசு வெச்சார்ன்னா நடக்கும்”. அது வரையில் நீங்க காத்திருக்கணும்” என்றார்.
இதை உடைக்கும் விதமாக நாங்கள் அவரிடம் பல முறை பேச முயன்றிருக்கிறோம். அவர் எங்களிடம் கவலைகளைப் புன்சிரிப்புடன் கேட்டுக் கொள்வாரே ஒழிய பதில் ஏதும் பிடித்துச் சொல்லி விட மாட்டார். “நீங்க கவலைப் படாதீங்கோ. உங்களுக்கு உங்க இன்ட்ரஸ்ட் ஏதாவது இருந்தா அதைப் பாருங்கோ” என்பார். அல்லது “அவன் பாடறத்துக்கு உண்டான பலன் என்னிக்கும் உண்டு. அது வீண் போகாது” என்பார். “எங்களுக்குப் பிறகு. . “என்று கேட்டோமென்றால் “நாங்க – ம்யூஸிக் ஃப்ராட்டர்னிட்டில அவனை விட்டுட மாட்டோம். நாங்க எல்லோரும் அவனைப் பாத்துப்போம்” என்பார். “என்னோட ஸ்ட்யூடன்ஸிலேயே ஆதித்யா மட்டும் தான் எங்கூடக் கடைசி வரையிலும் இருக்கப் போறவன். ம்யுஸிக்கைப் பர்ஸ்யூ பண்ணப் போறவன்” என்பார். எப்படியோ மிகவும் பாடுபட்டு ஆங்காங்கே கோயில்களில் ஆதித்யா எப்போதாவது கச்சேரி செய்வதற்கு அவரிடம் அநுமதி வாங்கினோம். அவ்வப்போது ஆதித்யா கச்சேரிகள் செய்து கொண்டிருந்தான். வழக்கமாகக் கூப்பிடும் இரண்டு மூன்று இடங்கள். பொதுவாகக் கோயில்கள் சென்னையில் உண்டு. அவற்றில் கச்சேரி செய்து கொண்டிருந்தான் ஆதித்யா. அவனுக்கென்று வழக்கமாய்ப் பக்கவாத்யங்கள் வாசிக்கிறவர்களை நாங்களே உருவாக்கிக் கொண்டோம். பெரிதும் பழுதில்லாமல் வாசிப்பவர்கள் அதே சமயம் பெரிய தொகையைச் சன்மானமாக எதிர்பார்க்காதவர்கள் என்று அமைத்துக் கொண்டோம்.
இந்தக் கச்சேரிகளின் ஒலிப்பதிவுகளை பெரிய இசைவாணரிடம் ஒலிப் பேழையில் பதிவு செய்து கொடுப்பது வழக்கம். அதைப் பற்றியெல்லாம் அவரிடமிருந்து எந்தவிதமான எதிர்வினையுமிருக்காது. நாமே கொஞ்சம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டுக் கடைசியில் “கேட்டீர்களா?” என்று ஆவல் தாங்க முடியாமல் கேட்டால், “ஏதோ கொஞ்சம் கேட்டேன். பரவாயில்லை” என்று விட்டேற்றியாக பதில் வரும். இந்த சமயத்தில் ஆதித்யாவின் பாட்டு இயற்றும் செயல் உச்சத்தில் இருந்தது. கணிப்பொறியின் முன் உட்கார்ந்து கொண்டு பாடல்களைத் தட்டச்சு செய்து கொண்டி அவற்றை ஸ்வரப் படுத்திக்கொண்டிருந்தான். இந்தப் பாடல்களை அவ்வப்போது பெரிய இசைவாணரிடம் கொண்டு போய்க் கொடுத்துக் கொண்டிருந்தான் ஆதித்யா. அதை ஓரப் பார்வை பார்த்து விட்டு வாங்கிக் கொள்வார். அத்துடன் சரி.
ஒரு முறை கேட்ட போது ‘வார்த்தைகளை மாற்றியமைக்க வேண்டும்; நான் இதற்காக அவனுடன் உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது’ என்றார். அதற்கு அத்துடன் சமாதி கட்டியாகி விட்டது.
பெரிய இசைவாணரின் முக்கிய மாணாக்கர்களில் இரண்டு சகோதரிகளும் அடங்குவர். இவர்களின் அன்னை நல்ல ஊக்கமுள்ளவர். வகுப்புகளுக்காகச் சொந்த வீட்டை விட்டு விட்டுப் பெரிய இசைவாணர் வீட்டிற்குப் பக்கத்திலேயே குடி வந்து விட்டார். அவர் எந்தவிதத்தில் பெரிய இசைவாணரைக் கவர்ந்தார் என்று இது நாள் வரை புரிந்து கொள்ள முடியவில்லை. பெரிய இசைவாணர் வகுப்பென்றால் அவர்களுக்கு வீட்டில் போய் அழைத்துக் கொண்டு வருவார் தன் காரிலேயே – வகுப்புகள் முடிந்தவுடன் தானே காரை ஓட்டிக் கொண்டு அவர்கள் வீட்டில் கொண்டு போய் விட்டு வருவார்.
ஆதித்யா சில சமயங்களில் வித்யாசமான ராகங்களில் பாட நிச்சயித்துக் கொண்டு வருவான். அந்த சமயத்தில் மட்டும் பெரிய இசைவாணர் சற்று கருத்தூன்றிக் கேட்பதுண்டு. தன் வாத்யத்திலும் அதை வாசித்துப் பார்ப்பார். முதலில் எங்களுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கும். இதன் உள் வயணம் பின்னர் தான் புரிந்தது. உதாரணமாக ஆதித்யா ஒரு வகுப்பில் ‘ரிஷபப்பிரியா’ என்கிற ராகத்தில் பாட்டுப் பாடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். பெரிய இசை வாணரின் அடுத்த கச்சேரியில் ‘ரிஷபப் பிரியா’ பாட்டு கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.
மற்ற சமயங்களில் சகோதரிகளுக்குத் தான் ஊக்கமாக வகுப்பு நடக்கும். ஊக்கபானக் கணக்காயர் இந்தப் போட்டி தாங்காமல் தானாகக் கழன்று கொண்டார். இதர மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கழன்று கொண்டனர். ஆதித்யா மட்டும் அன்றைக்கிருந்த மேனியிலேயே வகுப்புகளுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். பல சமயங்களில் குறிப்பிட்ட பாட்டை பெரிய இசைவாணர் முன் பாடிக் காட்ட வேண்டுமென்று தயார் செய்து கொண்டு போவான் ஆதித்யா. அவனுக்கு சந்தர்ப்பமே கொடுக்காமல் சகோதரிகளைப் பாடச் சொல்லிவிட்டு ‘இதை ரிகார்ட் செய்து கொண்டு போய் ‘ஆத்திலே பிராக்டிஸ் பண்ணிக்கோ’ என்று சொல்லி விடுவார். ஆதித்யா ஏமாற்றத்துடன் வீடு திரும்புவான். இப்படி ஒரு நாள் சில நாள் கிடையாது; வருடங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
பெரிய இசைவாணர் அவ்வப்போது வெளிநாட்டில் போய்த் தங்குவது என்று ஆரம்பித்தார். ஒரு முறை சென்றால் மூன்று மாதங்களிலிருந்து ஆறு மாதங்கள் வரைத் தங்குவது என்று வைத்துக்கொண்டார். அந்த சமயங்களில் ஆதித்யாவிற்கு ஏதாவது வகுப்புகள் தேவை என்று ஆலோசித்தோம். அந்த சமயத்தில் ஒரு பிரபல விசேடப் பள்ளியுடன் தொடர்புடைய பெண்மணி ஒருவருடன் நாங்கள் ஆதித்யாவின் முன்னேற்றத்துக்காக வேண்டித் தொடர்பில் இருந்தோம். அவருடன் ஆலோசித்த போது அவர் ஏற்கெனவே நாங்கள் முயற்சி செய்து கை விட்டிருந்த சர்வதேச இசை நடனப் பள்ளியில் ஏற்பாடு செய்வதாகவும் அதன் இயக்குநரிடம் பேசுவதாகவும் தெரிவித்தார். பெரிய இசைவாணரிடம் இதற்கான அநுமதியைப் பெற்றுப் பின்னர் இதற்கான முயற்சியில் இறங்கினோம்.
அந்த இசைப் பள்ளியில் ஆதித்யா சேர்ந்து தொடர்ந்து சென்று வருவது என்று ஆரம்பித்தான். அது…
~oOo~

அத்தியாயம் 23

ஏற்கெனவே நான் நடன இசைப் பள்ளியில் முயற்சி செய்த கசப்பான அனுபவங்களை விவரித்திருக்கிறேன். அந்தக் கல்லூரியின் இசைத் துறை முதல்வரைச் சந்தித்ததையும் பற்றிச் சொல்லியிருக்கிறேன். இடைப் பட்ட காலத்தில் பள்ளிக்கு ஒரு இயக்குநரைப் பணியில் அமர்த்தி இருந்தார்கள். இந்த இயக்குநர் பிரபல நடனமணி. குறைந்த வார்த்தைகளும் சுறுசுறுப்பும் நிமிர்ந்த நடையும் தீர்மானமான பார்வைகளும் கொண்டவர். கடுமையான உழைப்பும் பள்ளியின் முன்னேற்றத்திற்காகத் திடமான முடிவுகளும் செயல்பாடுகளும் கொண்டவர். வயது சுமார் ஐம்பது இருக்கலாம். பதினாறு வயது மங்கை தோற்கும் படியான உடல் வாகைக் கொண்டவர். நடனத்தை விடாமல் ஆடி ஆடி உடம்பைக் கட்டுக்குள் வைத்து வில்லாக வளைக்கக் கூடியவர்.
இவர் வந்ததிலிருந்து மிகவும் கண்டிப்பாகவும் ஆணித்தரமாகவும் சக ஆசிரியர்களிடம் நடந்து கொண்டு ஒழுங்கைக் கொண்டு வர முயன்றார். அதே சமயம் மாணவ மாணவியரிடம் மிகவும் வாத்ஸல்யமாக நடந்து கொண்டிருந்தார். விடுதியில் மாணவ மாணவிகள் தங்கிப் படித்து வந்தனர். அவர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்து பழகுவதை அவர் ஆதரித்தார். இது பெரிய சர்ச்சையை உருவாக்கிக் கொண்டிருந்தது. அவர் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. இசைப் துறை முதல்வர் அது நாள் வரை ராணியாகக் கோலோச்சி வந்தவர் பயந்து நடுங்கிற நிலை. இயக்குநர் அவருடைய வம்பு பேசிக் கொண்டு பொழுதை ஓட்டுகிற குணத்தை கொஞ்சம் கூட இரசிக்கவில்லை. ஓட ஓட விரட்டினார்.
இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் ஆதித்யா அங்கே போக ஆரம்பித்திருந்தான்.
என் மனைவி காலையில் பெண்ணைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஆதித்யாவைக் கூட்டிக் கொண்டு இசைப்பள்ளிக்குச் செல்வாள். அங்கே அவன் வகுப்பு முடிகிற வரை தேவுடு காத்துக் கொண்டு இருந்து விட்டு அழைத்துக் கொண்டு வருவாள். இயக்குநர் மூலமாக வந்ததாலோ என்னவோ இசை முதல்வர் ஆதித்யாவைக் கண்டாலே வெறுப்பை உமிழ ஆரம்பித்தார். ஆரம்ப நாட்களில் ஸ்வாதீனமாக வகுப்புகளில் போய் உட்கார்ந்து கொண்டிருந்த ஆதித்யா இந்த உதாசீனங்களைப் பார்த்து விட்டு நடன வகுப்புகளில் போய் உட்காருவது என்று ஆரம்பித்தான்.
இந்தப் பள்ளியில் குடில் குடிலாக இருக்கும். மிகவும் பரந்து பட்ட பிரதேசம். மரங்களுடன் சூழலே மிகவும் ரம்யமாக இருக்கும். திறந்த வெளி அரங்குத் தியேட்டரும் உண்டு. மிகவும் கலை நயத்துடனும் அதே சமயம் பாரம்பரியம் மிளிரும் வண்ணம் அமைக்கப் பட்ட இடம். பல வெளி நாட்டு ரூரிஸ்டுகள் சாரி சாரியாக வந்து செல்லும் இடம் என்பதால் இந்தியப் பாரம்பரியச் சின்னமாக அதைப் போற்றிப் பாதுகாத்து வந்தனர்.
ஆதித்யாவை நடனப் பள்ளியும் இயக்குநரும் இரு கரம் நீட்டி வரவேற்று வாரி அணைத்துக் கொண்டார்கள். அவர்கள் தினமும் பயிற்சி செய்கிற அறையில் போய் ஆதித்யா உட்கார்ந்து கொள்வான். நடன இயக்குநரைப் பொறுத்தவரை ஆதித்யா எந்தவிதத்தில் அவரைக் கவர்ந்தான் என்று புரியவில்லை. அவன் ஒரு நாள் வராவிட்டால் கூடக் கேட்க ஆரம்பித்து விடுவார். வருவதற்குச் சற்றுத் தாமதமானாலும் நிலை கொள்ளாமல் தவிப்பார். நடனப் பள்ளியைப் பொறுத்த மட்டில் முடிசூடா இளவரசனாக ஆதித்யா வலம் வந்து கொண்டிருந்தான்.
அவ்வப்போது இசையாசிரியர்கள் மத்தியில் சிறு சிறு முணுமுணுப்புகள் எழாமல் இல்லை. எல்லோருமே இயக்குநரின் வாய்க்குப் பயந்து சும்மா இருந்தார்கள் என்று நினைக்கிறேன். இந்த சமயங்களில் நடந்த சில வேடிக்கையான சம்பவங்களைச் சொல்லலாம் இன்று நினைக்கிறேன்.

இசைப்பள்ளி வளாகத்தில் நிறைய நாய்கள் வலம் வந்து கொண்டிருந்தன. எல்லாம் நாட்டு நாய்கள். அந்த நாய்களில் ஒன்று சில குட்டிகளை ஈன்றிருந்தது. அதில் ஒரு குட்டி உடம்பில் சொறி பிடித்திருந்தது. அது ஆதித்யாவைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவன் எங்கு சென்றாலும் அதைத் தன் கையில் தூக்கிக் கொண்டு செல்வது என்று ஆரம்பித்தான். பிஸ்கட் வைத்திருந்தால் போடுவான் போலிருக்கிறது. நாயின் சொறி கொஞ்சம் கொஞ்சமாகக் குணமாகி தேறி வந்தது. இந்த சமயத்தில் ஆதித்யாவின் தோளில் இது போன்ற தேமல்கள் தென்பட்டன. என் மனைவி அதிர்ந்து போய் “ என்னடா இது?” என்று விசாரித்திருக்கிறாள். ஆதித்யா அவளிடம் “டோண்ட் ஒர்ரிமா; இட் வில் பிகம் ஆல் ரைட்” என்றிருக்கிறான். கொஞ்ச நாட்களில் என்ன ஆச்சர்யம்! அவன் தோளில் தென்பட்ட தேமல் தழும்புகள் மறைந்து விட்டன.
இந்த சமயத்தில் ஆதித்யா காலையில் நடனப் பள்ளிக்குச் சென்றவுடனேயே நான்கைந்து நாய்கள் கூட்டமாக வந்து நிற்குமாம். அவன் நின்றால் ‘ப்ரேக்’ அடித்தாற்போன்று நாய்களும் நிற்குமாம். இது அங்கு கூட்டிப் பெருக்குகிறவர் காவலாளிகள் மத்தியில் பெரிய பேச்சாக ஆகி விட்டது. அவர்கள் எல்லோரும் ஆதித்யாவை ‘மகான்’ என்றும் என் மனைவியை ‘மகானின் அன்னை’ என்றும் அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தை நான் விவரிக்கக் காரணம் நான் இதற்குப் பெரிய அளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்கோ படிப்பவர்களை பயமுறுத்துவதற்காகவோ அன்று. நான் இதை எப்படிப் பார்க்கிறேன் என்றால் ஆதித்யாவால் வார்த்தைகள் இல்லாத ஒரு சம்பாஷணையை மிருகங்களுக்குப் புரிகிற அளவில் வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது என்பது தான். அது எதுவாகவும் இருக்கலாம்.
இந்தச் சமயத்தில் இதன் பின்னணியை நான் சொல்லப் புகுந்ததன் காரணம் வேறு. ஒரு நாள் என் மனைவி ஆதித்யாவை எங்கு தேடியும் அகப்படவில்லை. நடனப் பள்ளியின் அனைத்துக் குடில்களிலும் தேடி விட்டிருக்கிறாள். எல்லா மாணவர்களும் வகுப்புகள் முடிந்து புறப்படுகிற நேரம். எல்லோரும் ‘அங்கே பார்த்தேன்; இங்கே பார்த்தேன்’ என்று கூறியிருக்கிறார்களே ஒழிய யாருக்கும் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. என் மனைவி தவிப்பதை இந்தக் கருப்பு நாய்க்குட்டி பார்த்து விட்டு அவள் புடவையைப் பல்லால் கடித்து ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு குடிலுக்கு இழுத்துச் சென்றிருக்கிறது. அந்தக் குடிலை என் மனைவி பார்க்கவில்லை போலிருக்கிறது. அந்தக் குடிலில் ஆதித்யா இருந்திருக்கிறான்! அன்றைய தேடு படலம் இத்துடன் முடிவுக்கு வந்தது.
அப்போது நடனப்பள்ளியின் திறந்த வெளி அரங்கில் அவ்வப்போது கச்சேரிகள் நடந்து வந்தன. இதைப் பார்த்த ஆதித்யாவுக்குத் தானும் அங்கே கச்சேரி செய்ய வேண்டுமென்கிற ஆசை பிறந்தது. நாங்கள் கொஞ்சம் தயக்கத்துடன் தான் இயக்குநரை அனுகினோம். அவர் எங்களிடம் கனிவாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு ஆதித்யா கச்சேரி செய்வதில் பெரிய தடை ஒன்றும் கிடையாதென்றும் கூடிய மட்டில் கச்சேரியை நடனப் பள்ளியே வழங்க முடியும் என்று கூறினார். நடனப் பள்ளியின் ‘பட்ஜெட்’ க்குள் தான் செலவு இருக்குமென்பதால் அதைச் செலவழிப்பதில் பெரிய பிரச்னை ஒன்றும் இருக்காதென்றும் தெரிவித்தார்.
எங்களிடம் பேசிய கையுடன் அவர் இசைக் கல்லூரி முதல்வரைக் கூப்பிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே எங்களையும் ஆதித்யாவையும் கண்டாலே முதல்வருக்கு இளக்காரம். நாங்கள் அவர் மூலமாக அட்மிஷன் வாங்கவில்லை என்கிற கோபம் வேறு. இப்படியிருக்கும் போது இயக்குநர் ஆதித்யாவிற்குக் கச்சேரி ஏற்பாடு செய்யச் சொன்ன அவமானம் தாங்க முடியாமல் அவர் பொங்கி எழுந்து விட்டார். என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பெரிதாக வசை பாட ஆரம்பித்து விட்டார். “பட்ஜெட்டே கிடையாது. செலவழிங்கறா. என்னைப் போய் பக்க வாத்தியம் ஏற்பாடு செய்ங்கறா. இதெல்லாம் நீங்க தான் பண்ணிக்கணும். முதல்ல ஆதித்யாவைப் பாட வைக்க ரூல்ஸ்லியே எடம் கிடையாது” என்றெல்லாம் ‘குய்யோ முறையோ’ என்று கத்தினார். ‘நானே ஏற்பாடு செய்து கொள்கிறேன்’ என்று நான் கூறிய பிறகு தான் அவர் ஓய்ந்தார். இதையே இயக்குநரிடமும் அவர் கூறியிருப்பார் போலிருக்கிறது. இயக்குநர் என் மனைவியைக் கூப்பிட்டு ‘பக்க வாத்யங்கள் செலவை நீங்களே ஏற்றுக் கொள்ள முடியுமா?” என்று கேட்டிருக்கிறார். எங்களுக்குப் பெரிய ஆட்சேபணைகள் இல்லை. இது வழக்கமாய் நடப்பது தான் என்பதால் நங்கள் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.
பாடுபட்டுப் பக்கவாத்யம் ஏற்பாடு செய்தேன். பெரிய வித்வான். வயலின் வாசிக்கிறவர் – மாற்றுத்திறனாளி – அவருக்குப் போன் செய்தேன் சிஷ்யர்கள் யாரையாவது சிபாரிசு செய்ய முடியுமா என்று. “எல்லாரும் கம்ப்யூட்டர் வேலைக்குப் போயிட்டாங்கள் சார். வேலைக்கும் போயிண்டு கச்சேரிக்கும் வாசிக்கிற ஒருத்தன் இருக்கான். ட்ரை பண்ணிப் பாருங்கோ” என்று அவர் தொலைபேசி எண் தந்தார். நல்ல வேளையாக அந்தப் பையன் வாசிக்கச் சம்மதித்தான். வழக்கமாய் மிருதங்கம் வாசிக்கிற பையனும் கஞ்சிரா வாசிக்கிற பையனும் வந்தார்கள். கச்சேரி ஏற்பாடாக ஆயிற்று. இசைக் கல்லூரி முதல்வரின் ஆட்சேபணையால் கச்சேரி மையத் திறந்த வெளி அரங்கில் ஏற்பாடாகவில்லை. கொஞ்சம் சிறிய அரங்கில் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
கச்சேரிக்கு இசைத் துறையைச் சேர்ந்த எந்த ஆசிரியரும் வரவில்லை. இசை முதல்வரும் புறக்கணித்தார். அதை ஈடுகட்டும் விதமாக நடன மாணவ மாணவிகள் அனைவரும் பெருவாரியாகக் கலந்து கொண்டார்கள். ஒவ்வொரு பாட்டு முடியும் போதும் கிட்டத்தட்ட இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஏகோபித்த கரகோஷம். அது போல் ஒரு பாராட்டை அப்போது தான் முதன் முறையாகப் பார்த்தோம். அந்தக் கச்சேரியில் ஆதித்யா நீண்ட நாட்களுக்குப் பிறகு ராகம் தாளம் பல்லவி பாடினான். அதற்குக் கோஸலம் என்கிற ராகத்தை எடுத்துக் கொண்டான். அவன் கச்சேரிக்கான ஜாபிதா தயார் செய்யும் போதே இது குறித்த எச்சரிக்கை என் மனதில் தொனித்தது. வயலின் வாசிக்கிற பையனிடம் இதை முன்னதாகத் தெரிவித்திருந்தேன். அவனும் ஆதித்யாவிடம் பேசி ஆரோகண அவரோகணத்தைக் கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டிருந்தான். அப்படியும் கச்சேரியில் வாசிக்கும் போது தவறு செய்து விட்டான் போலிருக்கிறது. ஆதித்யா ஆலாபனையை நிறுத்திவிட்டு, “கோஸலம் மேன்!” என்றான்! நல்ல வேளையாக வயலின் பையன் அதைப் பெரிதும் பொருட்படுத்தாமல் சிரித்துக் கொண்டே திருத்திக் கொண்டதில் சுமூகமாய் முடிந்தது.
எப்போதுமே கச்சேரி முடிந்தவுடன் ஆதித்யா கொஞ்சம் கொந்தளிப்பான மனநிலையில் இருப்பான். அவனிடம் சாதாரணமாகப் போய்ப் பேசி விடுவதோ கை கொடுப்பதோ நடக்காது. அந்த மாதிரிப் கொந்தளிப்புடன் வெளியில் வந்து அமர்ந்து கொண்டிருந்தான். நடனப் பள்ளியின் மாணவிகள் சாரி சாரியாக அவனிடம் வந்து “வெல்டன் ஆதித்யா!” என்று சொல்லிவிட்டு அவன் தாவாங் கட்டையைப் பிடித்துக் கொஞ்சி விட்டு கையைக் குலுக்கி விட்டு நகர்ந்தார்கள். அந்தப் பெண் குழந்தைகள் அவனிடம் அவ்வளவு பாசமாகப் பேசி விட்டுச் சென்றது எங்களுக்குக் கண்ணீரை வரவழைத்தது. ஆதித்யா வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டு காலகாலன் போல் உட்கார்ந்திருந்தான்.
வெளியே வரும்போது இயக்குநரும் நானும் ஒன்றாக நடந்து வந்து கொண்டிருந்தோம். அப்போது அவர் என்னிடம் கேட்டார்: “இன்றைக்கு அவன் பாடியதில் எத்தனை அவன் குருநாதர் கற்றுக் கொடுத்தது?” என்று. என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர் சொல்லிக் கொடுத்ததோ பயிற்சி அளித்ததோ அன்று பாடியதில் ஒன்று கூடக் கிடையாது. பெரிய இசைவாணர் என்று பொருந்தி அவனுக்கு வகுப்பு எடுத்திருக்கிறார்? அவ்ர் என்னவோ அந்த இரண்டு சகோதரிகளை முன்னுக்குக் கொண்டு வருவதிலேயே கவனமாக இருக்கிறார். இயக்குநர் என் எண்ண ஓட்டத்தைப் படித்து விட்ட மாதிரித் தெரிந்தது.
“நான் நினைச்சது சரிதான்” என்று புன்னகைத்தார். “நான் கேள்விப்படுகிற விஷயங்கள் மிகவும் மோசமானவை. நீங்கள் இதுவரை கர்நாடக சங்கீத உலகிற்குள் நுழையாமல் இருப்பதால் உங்களுக்கு அதெல்லாம் தெரியவில்லை. அப்படியே இருக்கட்டும். அதனால் ஆதித்யாவைப் பெரிய அளவில் கர்நாடக சங்கீத உலகிற்குள் கொண்டு வர அவசரப் படாதீர்கள். அவன் குருநாதர் ஏதாவது பெரிய அளவில் அவனுக்குச் செய்வார் என்றெல்லாம் எதிர்பார்ப்பது பயனற்றது. அவர் ஆதித்யாவிடம் என்ன விஷயத்தைக் கறக்க முடியுமோ கறந்து கொண்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டு தன் வழியே செல்வார். அவனால் ஏதோ பிரயோஜனம் இருப்பதால் தான் அவனை தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் தான் இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார். அவர் அவ்வளவு ஒரு சேரப் பேசி அன்று தான் கேட்கிறேன்.
பெரிய இசைவாணரிடம் நடனப் பள்ளி கச்சேரியைப் பற்றிச் சொன்னதும், “டைரக்டர்ட்ட என்னைப் பத்திச் சொன்னேளோ?” என்று கேட்டுக் கொண்டார். சொன்னேன் என்று சொன்னதும் திருப்தி நிலவியது அவர் முகத்தில்.
இதன் பிறகு நடனப் பள்ளியையும் விட வேண்டிய சூழல் வந்தது. மறுபடியும் படிப்பு பாதியில் நிற்கிறதே என்கிற பயம் பிடித்துக் கொண்டது. அதற்கான முயற்சியில் இறங்கும்போது தேசிய திறந்த வெளிப் பள்ளி மூலமாக பத்தாவதும் பின்னர் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வும் எழுத வைக்கலாம் என்கிற யோசனை வந்த போது அதற்கான ஒரு பள்ளியில் பதிவைச் செய்து அங்கு சில வகுப்புகளுக்குச் செல்வது என்று ஆரம்பித்தோம். இயக்குநரிடம் தெரிவித்த போது அவர் மிகவும் தீர்மானமாக “ஆதித்யாவைப் பொறுத்த மட்டில் அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. ஏதோ நீங்கள் சொல்கிறீர்கள். அதற்காக முயற்சி செய்யுங்கள். இப்படியே ஒன்றிரண்டு வருடங்கள் ஓடட்டும். பின் இங்கேயே வாருங்கள். ஆதித்யாவிற்காக எங்கள் பள்ளியின் கதவுகள் என்றும் திறந்திருக்கும்” என்று கூறி அனுப்பி வைத்தார்.
ஆனால் இது நடந்து ஒரு வருடத்திலேயே நடனப் பள்ளியில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. எல்லோரும் கோஷ்டி கட்டிக் கொண்டு இயக்குநரை ஒழித்துக் கட்டுவது என்று கிளம்பினார்கள். இயக்குநர் அழுத்தம் தாங்க முடியாது ராஜினாமா செய்தார். அத்துடன் அவருடைய நடனப் பள்ளியின் பதவி முடிவுக்கு வந்தது.
அவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். அவர் ஒரு முறை எங்களிடம் பேசிக் கொண்டிருந்த போது கூறினார்: “ஆதித்யா என்பது நம்மைப் போல ஒரு ஆத்மா. எதையெல்லாமோ முயன்று விட்டு மிச்சமிருக்கிற கருமத்தைத் தொலைக்க விட்டகுறை தொட்ட குறையாக நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. அதற்கு உதவி செய்வது தான் நம் கடமை” என்ன காருண்யம்! என்ன மன முதிர்ச்சி! இதையே நம் பெரிய இசைவாணர் எப்படிப் பார்த்தார் என்று அடுத்த அத்யாயத்தில் விளக்குகிறேன்.

நன்றி : சொல்வனம் 

https://solvanam.com/?p=51494

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...