அத்தியாயம் 24
“இந்தக் குழந்தை வேறு ஒரு சிந்தனையுமில்லாமல் இசையிலேயே மூழ்கிக் கிடக்கிறானே இவன் கதி?” என்று என் மனைவி ஆற்றாமையில் ஒரு நாள் பெரிய இசைவாணரிடம் கேட்டிருக்கிறாள். அதற்கு அவர், “நாம ரோடில நடந்து போயிண்டிருக்கற போது ஒருத்தன் குடிச்சிட்டு விழுந்து கிடந்தான்னா அவனைத் தாண்டிப் போயிண்டிருப்போம். அப்படி நெனைச்சுக்க வேண்டியது தான்” என்றிருக்கிறார் கிராதகத்தனமாக. என் மனைவி எதார்த்தமாகக் கேட்ட கேள்விக்கு எவ்வளவு அரக்கத்தனம் இருந்தால் ஒரு மனிதன் இப்படி பதில் சொல்ல முடியும்? இதைச் சொல்லி என் மனைவி அழுத போது நான் இதற்காகத் தானோ என்னவோ கடவுள் இந்த மனிதருக்கு சந்தான சௌபாக்கியத்தைத் தரவில்லை என்று நினைத்துக் கொண்டேன். இந்த மனிதர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டபோதும் குழந்தைகள் இல்லை. இவர் உறவினர் இசைவாணர் திருமணமாகியிருந்தும் குழந்தைகள் இல்லை. அவருக்குப் பின்னர் மணமுறிவும் ஆகி விட்டது.
“ஆதித்யா எங்களுக்கெல்லாம் மேலே” என்று சொல்லிக் கொண்டிருந்தவர்! அவர் எங்களிடம் என்ன எதிர்பார்த்தார் நாங்கள் எதைப் பூர்த்தி செய்யவில்லை என்று இன்று வரை புரிந்து கொள்ள முடியவில்லை. பணம் என்றால் இயன்ற அளவு செலவழிக்கத் தயாராகவே இருந்தோம். விஜயதசமி என்றால் நாங்களே உபயோகிக்காத சாமானாக வெள்ளியில் நாதள்ளாவில் வாங்கிக் கொடுப்போம். “பையனை இஞ்சினீரிங் படிக்க வெச்சா செலவழிப்பேளா இல்லியா? அந்த மாதிரி நினைச்சுக்க வேண்டியது தான்” என்பார். “அவன் பாடிண்டேயிருக்கட்டும். அவன் பின்னால நாம எல்லோரும் போயிண்டிருக்கலாம்” என்பார். “அவன் இவ்வளவு பாடறானே அதற்கான பலன் இல்லாம போகாது” என்பார். ஆனால் நாங்கள் படுகிற அவதிகளை அவர், அவர் மனைவி, மற்றும் சகோதரிகள் அவர்களின் அன்னை இவர்கள் புன்சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். வகுப்பில் ஒரு நாள் வேண்டுமென்றே வாத்யத்தை வாசிக்கும் போது ஒரு அந்நிய ஸ்வரத்தை ஒரு ராகத்தில் வாசித்தார். ஆதித்யா அத்தனை நேரம் பேசாமல் இருந்தவன் பெரிய இசைவாணரின் பெயரைச் சொல்லிச் சத்தம் போட்டான். அவர் சிரித்துக் கொண்டே மேலே வாசித்துக் கொண்டு போனார். எங்காவது தப்பு செய்யும் போது கவனிக்கிறானா என்று சோதனை செய்திருக்கிறார். சாதாரணமாகவே அவர் அவன் முன் ரொம்ப வாசிப்பதில்லை. நன்றாகப் பழகிய ராகங்களை வாசிப்பாரே ஒழிய புது ராகங்கள் எதையும் முயற்சி செய்யமாட்டார். அப்படியும் அவர்கள் பாடிக்கொண்டிருக்கும் போது ஆதித்யா குறுக்கே புகுந்து திருத்தி இருக்கிறான். அவர் “ஆதித்யா நம்ம தப்பு பண்ணா சொல்றத்துக்குத் தானிருக்கான். அதுனால நம்ம தப்பே பண்ண முடியாது” என்பார்.
அந்த சமயத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தான் ஆரம்ப காலத்தில் வாசித்துக் கொண்டிருந்த ஒரு குட்டி தந்தி வாத்யத்தை ஆதித்யாவிடம் கொடுத்து“ஆத்தில வாசிச்சிண்டிருக்கட்டும்” என்றார். ஆனால் அதை எப்படி வாசிக்க வேண்டும் என்று அவன் கையைப் பிடித்து ஒரு முறை கூட சொல்லிக் கொடுக்கவில்லை. ஆதித்யா மிகுந்த முன் முயற்சி எடுத்து அதை வாசிக்கக் கற்றுக் கொண்டு வாசிப்பது என்று ஆரம்பித்தான். அதை வகுப்புகளுக்கு எடுத்துச் செல்வான். ஆனால் அவருக்கு அவன் வாத்யத்தில் பெரிதாகக் கிளம்பி விடப் போகிறானே என்றிருந்ததோ என்னவோ! அதை தந்திகள் இறுக்கி ‘ட்யூன்’ செய்வது எப்படி என்று கூடச் சொல்லிக் கொடுக்கவில்லை. அப்போது ஆதித்யாவிற்கு‘கிடாரி‘ன் மேல் பெரிய மோகம் இருந்தது. அதற்காக ஒரு ‘கிடாரை‘ வாங்கி அதில் சில மாறுதல்கள் செய்தோம். கையால் மீட்டுவதற்கு பதிலாக உருளையை வைத்து உருட்டுகிற மாதிரி மாற்றிக் கொடுத்தோம். ‘ஹவாயன் கிடார்’ என்பார்கள். அதையும் தானாகவே கற்றுக்கொண்டு வாசித்துக் கொண்டிருந்தான் ஆதித்யா. பின்னர் பெரிய இசைவாணர் ஆரம்ப காலத்தில் முயற்சி செய்து முடியமல் போன‘ஹவாயன் கிடார்’ ஒன்றையும் ஆதித்யாவிடம் கொடுத்து வைத்திருந்தார். அவன் அதையும் தானாகவே கற்றுக் கொண்டு அவ்வப்போது வாசித்துக் கொண்டிருந்தான். வெளிநாட்டிலிருந்து யாராவது
வந்தால் நம் பெரிய இசைவாணரிடமிருந்து போன் வரும் ஆதித்யாவை வகுப்புக்கு அழைத்துவரும்படி. என் மனைவி போட்டது போட்டபடி விட்டு விட்டு ஆதித்யாவை இழுத்துக் கொண்டு ஓடுவாள். அங்கே அவர்களுக்கு ஆதித்யாவைக் காட்சிப் பொருளாக்க பெரிய இசைவாணர் விரும்பினார் என்று நினைக்கிறேன். இந்தப் பொருட்காட்சிகளில் மனிதத் தலை பாம்பு உடம்பு என்று ஒரு விநோத ஐந்துவைக் காண்பிப்பார்களே அது போல. அது போல் ஒரு முறை ஒரு வெள்ளைக்காரர் பட்டை பட்டையாக விபூதி இட்டுக் கொண்டு வேஷ்டி அங்கவஸ்திரத்துடன் உட்கார்ந்திருந்தார். எங்களைப் பார்த்துக் குழந்தை போல் சிரித்து ‘நமஸ்காரம்’ என்றார். எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. “பாரு நம்ம ஊர்ல எல்லாம் எல்லாத்தையும் விட்டுட்டு உட்கார்ந்திருக்கோம். அவாள்லாம் எப்படி ஃபாலோ பண்றா பாரு” என்றேன். எல்லோரும் பெரிய இசைவாணருக்காகக் காத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தோம். அங்கிருந்த ஒரு மாணவி என்ஸி வசந்த கோகிலம் போல் குரல் உள்ளவள் நிறைய பிருகாக்கள் போட்டு மாண்டு ராகத்தில்‘பேக பாரோ பேக பாரோ’ என்று பாடினாள். அப்படியே உயிரை உலுக்கும் குரல். நான் கதன குதூகலத்தில் ‘ரக வம்ச சுதாவை’ எடுத்தேன். வெள்ளைக்காரர் என் பக்கம் திரும்பி “ஐ லைக் தட் ராகா வெரி மச்” என்றார். கண்கள் விகசிக்க. எல்லோரும் உட்கார்ந்திருந்தோம். ஏனைய மாணவியர் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆதித்யாவும் எதையோ நினைத்துச் சிரித்துக் கொண்டிருந்தான் அன்று வகுப்பு நடக்கவில்லை.
இந்த வெள்ளைக்காரர் கோபித்துக் கொண்டு போய்விட்டார் என்று பின்னால்
கேள்விப்பட்டேன். எல்லோரும் சிரித்துப் பேசியது தன்னைப் பார்த்துத் தான் என்று அவருக்குத் தோன்றி அவர் சண்டை போட்டுக் கொண்டு கிளம்பி விட்டாராம். பெரிய இசைவாணருக்குப் பெரிதாகக் கோபம் வந்து அந்தக் குழுவையே கலைத்து விட்டார். ‘பேக பாரோ’ பாடிய மாணவி ரொம்ப நாள் பெரிய இசைவாணரிடம் இருந்து விட்டுத் தனியாக வீடு எடுத்துக் கொண்டு தங்கி வகுப்புகளுக்கு முயன்று விட்டு ஒன்றும் பிரயோஜனப் படாமல் விட்டு விட்டுச் சென்று விட்டாள்.
இது அடிக்கடி நடக்கும். என்னவென்று புரியாமல் திணறினோம், வகுப்புக்கு வரச் சொல்லுவார். பொறுமையாக உட்கார்ந்திருப்போம். அவர்கள் வீட்டில் சிசி டிவி காமரா இருந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் என்ன செய்கிறோம் என்ன பேசுகிறோம் என்பதை வேறெங்கிருந்தோ அவர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பது போன்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. அரை மணி நேரம் கழித்துச் சில சமயம் அவர் உள்ளேயிருந்து வருவார். எங்கள் கண்ணில் படுகிற மாதிரி பர்ஸ் வங்கிக் கணக்குப் புத்தகம் இவற்றைப் போட்டு வைத்திருப்பார்கள். நாங்கள் அதை எடுத்துக் குடைகிறோமா என்று சோதிக்கிறார்களோ என்று தோன்றும். சில சமயம் வெளியில் போய் விட்டுத் தாமதமாக வருவார். எங்களைப் பார்த்து விட்டுச் சிடுசிடுப்புடன், “நான் வீட்டிலே இல்லைன்னா என்ன? ஸ்ருதியை எடுத்துப் போட்டுப் பாடிண்டிருக்க வேண்டியது தானே?” என்பார்.
சிலசமயம் இரு சகோதரிகளைக் காரில் கூட்டிக் கொண்டு வந்து கேட்டில் நின்று‘ஹார்ன்’ அடித்துக் கொண்டு நிற்பார். நாங்கள் அவசரமாக அவசரமாக ஓடிப் போய்ப் கதவைத் திறந்து விட்டு நிற்போம். அதை அவரும் சகோதரிகளும் பெருமிதம் கலந்த புன்னகையுடன் பார்த்து விட்டுக் கடந்து செல்வார்கள். ஒரு முறை எங்களை வரச் சொல்லி விட்டு ஆளையே காணோம். நாங்களும் இன்னொரு பையனும் உட்கார்ந்திருந்தோம். ஒரு அரை மணி கழித்து வகுப்பு இல்லை என்று செய்தி வந்தது. அந்தப் பையன் தயங்கித் தயங்கி உட்கார்ந்து கொண்டேயிருந்தான். ‘கிளம்பவில்லையா? என்று கேட்டதற்கு ஏதோ சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருந்தான். நாங்கள் கிளம்பினோம். அன்றைய நடவடிக்கையைப் பார்த்தால் அவர் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு எங்களை விரட்டுவதற்காக ‘ஆள் இல்லை’ என்று செய்தி அனுப்பியிருக்கிறார் என்று தோன்றியது. இது போன்ற ஒரு நடவடிக்கை ஒரு நாள் அவருக்கெதிராகவே திரும்பியதையும் நாங்கள் அவதானித்தோம். ஒரு நாள் வகுப்புக்கு வரச் சொன்னார். வீட்டில் இல்லை. அமெரிக்காவிலிருந்து ஒரு பெண்மணி வந்திருந்தார். நாங்கள் என்ன செய்வதென்று திகைத்தோம். அன்று வகுப்பு இல்லை என்று செய்தியனுப்பினார். வீட்டில் ‘பேகபாரோ’ பாடிய பெண்ணும் உட்கார்ந்திருந்தது. அன்று வழக்கத்திற்கு மாறாக நாங்கள் எங்களுக்குள் பயிற்சி செய்வதென்று முடிவு செய்து ஆரம்பித்தோம். அந்தப் பெண்மணியும் கலந்து கொண்டு பாடினார். அன்று ஆதித்யா அபாரமாக ஸ்வரம் பாடினான். அந்தப் பெண்மணி அதைக் கேட்டு விட்டு அதிசயித்துப் போனார். பெயர் என்ன என்று கேட்டுவிட்டு என் மனைவி சொன்னவுடன் “ஓ இவன் தான் ஆதித்யாவா? யுஎஸ்ஸிலே கேள்விப் பட்டிருக்கேன்” என்றார் வியப்புடன். அன்றுடன் ‘பேக பாரோ’ பாடிய பெண்ணிற்கு பெரிய இசைவாணரின் வகுப்புகள் முடிவுக்கு வந்தன. அவர் அமெரிக்கப் பெண்மணி முன்னால் ஆதித்யா பாடுவதையும் விரும்பவில்லை போலும்! “பேகபாரோ” பாடிய பெண்ணை அத்துடன் விரட்டி விட்டு விட்டார்.
“எல்லோரும் எனக்குப் பண்ணுங்கோ. எனக்குப் பண்றது பெருமாளுக்குப் பண்ற மாதிரி” என்பார். தன்னை அவர் பெருமாளின் அவதாரம் என்று நினைத்திருந்தார் போலிருக்கிறது. சகோதரிகளின் அன்னை அவர் சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொண்டு மிக மரியாதையுடன் நடந்து கொள்வார். அவர்கள் பெரிய இசைவாணர் சொல்படிக் குடும்பமாகச் செயல்படுவார்கள். ஏதாவது நாள் கிழமை விசேஷம் என்றால் வீட்டில் நைவேத்யம் செய்த பலகாரங்களைப் பெரிய இசைவாணர் வீட்டில் கொண்டு போய்ச் சேர்ப்பார்கள். பெரிய இசைவாணரின் கச்சேரி என்றால் அவர் பாடிய ஒலிப் பேழைகளை விற்பதாக வெளியில் போட்டிருக்கும் ஸ்டாலில் போய் நிற்பார்கள். பெரிய இசைவாணரின் கச்சேரி என்றால் சகோதரிகள் பின் அமர்ந்து கொண்டு தம்புரா போடுவார்கள். ஆனால் பெரிய இசைவாணர் மகுடிக்கு மயங்கும் நாகம் போல எப்படி ஆடுகிறார்
என்பது இன்று வரை எங்களுக்குப் புரியாத மர்மமே. இதை நீட்டி இரசக் குறைவாக நினைக்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்று சொல்வதுடன் இதை நிறுத்திக் கொள்கிறேன்.
பெரிய இசைவாணர் வீட்டில் சகோதரிகளின் அன்னையுடன் என் மனைவி பேசிக் கொண்டிருந்தபோது
அவர் என் மகளைப் பற்றி விசாரித்திருக்கிறார். என் மகள் பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கிறாள் என்று சொன்னவுடன் பெருமூச்சு விட்டிருக்கிறார். என் மனைவி ‘ஏன் உங்கள் குழந்தைகள் சங்கீதத்தில் நன்றாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறார்களே?’ என்று ஆறுதலாகக் கேட்டவுடன் அவர் சொன்னாராம்: “என்னத்தைக் சொல்றது? வெளில ஒண்ணு இருக்கு; உள்ளே வேற மாதிரி இருக்கு. ஒண்ணும் கேட்காதே”
நன்றி : சொல்வனம்
https://solvanam.com/?p=51628
நன்றி : சொல்வனம்
https://solvanam.com/?p=51628
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக