நல்லூர் சங்கீத வித்வான்களுக்கு கோவிந்த ராவ் வீட்டு பஜனை தான் புகலிடம். வருடம் ஒரு முறை நரசிம்ம ஜயந்தி உற்சவம் பத்து நாள் நடக்கும் போது கொஞ்சம் “கார்வார்” பண்ணிக் கொண்டிருப்பார்கள். அங்கேயும் கச்சேரிகளில்
வெளியூர் வித்வான்களுக்குத்தான் பிராதான்யம்.
பஜனையில் விசு சார் ஓர் ஓரமாய் உட்கார்ந்திருப்பார். அவரைப் பார்த்தால் எவருக்கும் சங்கீத வித்வான் என்று தோன்றாது. அப்படி ஓர் அசட்டுக் களை. சாம்பல் பூத்த கருப்பு. நீர்க் காவி ஏறிய வேஷ்டி, நைந்து போன சட்டை. தோளில் அதே கலரில் துண்டு, பஜனை சுமாராக இரவு எட்டு மணி வாக்கில் ஆரம்பிக்கும். வெங்காச்சமும்,
சீமாச்சுவும் வரும் வரையில் எல்லோருமே காத்திருப்பார்கள். ஏனென்றால் வெங்காச்சம் தான் ஹார்மோனியம் வாசிப்பார். சீமாச்சு கையில் தான் பஜனை சம்ப்ரதாய புத்தகம் இருக்கும்.
அவர்கள் வரும் வரை விசு சார் வாயை யாராவது கிளறிக் கொண்டிருப்பார்கள். அவரும் சிரித்துக் கோண்டே ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்.
அவர் சரஸு மாமியைக் கல்யாணம் பண்ணிக் கொண்ட சம்பவத்தைக் கேட்பார்கள். நூறாவது முறையாக யாராவது கேட்டாலும்
அலுக்காமல் அசட்டுச் சிரிப்புடன்
சொல்லிக் கொண்டிருப்பார்.
“அவ என் மாமா பொண்ணுதான். மாமாவுக்கு ரொம்ப இஷ்டம் எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னுட்டு. அவ அம்மாக்காரிக்கு
இஷ்டமில்லை. பெரிய இடத்திலிருந்து வந்தவ. புருஷன் பிடுங்கல் தாங்க முடியாம பொண்ணையும் அழைச்சிண்டு எங்காத்துக்கு வந்தா. அப்பல்லாம் நான் வேணு சார்ட்ட பாட்டுக்குப் போயிண்டிருந்தேன்.
எப்ப பாத்தாலும் பாடிண்டேயிருப்பான்.
எங்கம்மா அன்னிக்குப் பார்த்து ரெண்ட படி அரிசி போட்டிருந்தா அரைக்க. நான் கல்லோரல்ல போட்டு அரைச்சிண்டே பஞ்ச ரத்ன கீர்த்தனையைப் பாட ஆரம்பிச்சுட்டேன் வந்த அம்மாவும் பொண்ணும் என்னைப் பாத்தா அந்த மாமி நேர எங்க அம்மாட்ட போயி “இந்த மாதிரி கோண்டுக்கு என் பெண்ணைத் தர முடியாதும்மா. மன்னி என்னை மன்னிச்சுக்கோ.” என்று பெண்ணையும் கூட்டிண்டு போயிட்டா.
ஆனா தெய்வம் வேறொண்ணு நினைக்கிறதே?”
“பெரிய உத்யோகஸ்தன்னு ஒரு பிள்ளையை நிச்சயம் பண்ணிணா. நாங்க எல்லாரும் வண்டி கட்டிண்டு போனோம் கல்யாணத்துக்கு. நல்ல வேனல் காலம். ஜானவாசத்துக்கு சாரட் வண்டி நிக்கறது. மாப்பிள்ளையைக் காணும்! என்ன குறையோ என்ன பிரச்னையோ. எல்லா இடத்திலேயும் தேடிட்டு மாமா கடைசியில் எங்கப்பா காலைப் பிடிச்சார். “அத்திம்பேர்! மானம் போயிடுத்து, நீங்க தான் காப்பாத்தணும்”னு, எங்கப்பா “டேய் விசு போய் மணையில உக்காரு”ன்னார்.
எங்க மாமி “கடைசியிலே என் கதிதான் ஆச்சு உனக்கும்”னு பொண்ணைக் கட்டிண்டு அழுதாள். என்ன பண்ண? எனக்கும் சரசுவுக்கும் ஈஸ்வரன் முடிச்சுப் போட்டுருக்கச்ச யார் அழுது என்ன? இவ வந்து சேந்தா என் ஆம்படையாளா...” என்பார்.
வேணு சாரிடம் குருகுலமாக சங்கீதம் கற்றுக் கொண்டாராம். அவர்கள் வீட்டில் சமையல் துணி துவைப்பது, பத்து பாத்திரம் தேய்ப்பது, வீடு பெருக்கி மெழுகுவது, வெளி வேலைகள் எல்லாவற்றிற்கும் இவர்தான். இவையெல்லாவற்றையும்
செய்து கொண்டே சங்கீதம் எப்படிக் கற்றுக் கொண்டார் என்பது ஆச்சரியம்தான். அதுவும் எப்பேர்பட்ட சங்கீதம்! இம்மியும்
ஸ்ருதி விலகாது. மென்மையான ஆனால் அப்படியே உருக்குகிற குரல் ‘அபராம பக்தி’ பாடினார் என்றால் ஆஞ்சநேயஸ்வாமி
ஆனந்த பாஷ்யம் பெருக முன்னால உட்கார்ந்திருப்பது சாட்சாத்காரமாய்த் தெரியும்.
ஞானம் என்றால் அப்படி ஒரு ஞானம். தீக்ஷிதரா ஸ்யாமா சாஸ்த்ரியா, தியாகராஜா அத்தனையும்
அத்துப்படி. ஒரு தடவை காப்பிக் கொட்டை கல்யாணம் நீலாம்பரி ராக ஆலாபனை பாடிக் கொண்டிருந்தான். அவனுக்குக்
கேள்வி ஞானம் தான். ஸ்வர ஞானமெல்லாம் கிடையாது. கொஞ்சம் மிதப்பும் உண்டு. பாடிக் கொண்டிருக்கும் போதே அவனுக்கும் சங்கர ஆசாரிக்கும் சண்டை வந்து விட்டது. கண்களை மூடிக் கேட்டுக் கொண்டிருந்த விசு சாரிடம் தான் பஞ்சாயத்துக்குப் போனார்கள்.
அவர் அசட்டுச் சிரிப்புடன் “நன்னாப் பாடினார் பாதகமில்லை.
அங்கங்கே கொஞ்சம் சுத்த ஸாவேரி எட்டிப் பாத்தது பரவாயில்லை. அதுவும் நன்னாத் தான் இருந்தது” என்றார் சாவதானமாக. எங்கே தப்பு என்று ஸ்வரமாகப்பாடி வேறு காண்பித்தார். அவர் காதில் விழுகிறார் போன்று, சங்கர ஆசாரி “தப்புப் பண்றான்னு தெரிஞ்சுண்டே உட்கார்ந்திருக்கு கிழம், கல்லூளி மங்கனாட்டமா” என்றார். அதற்கும் அசட்டு சிரிப்புத்தான். அதையும் கேட்டுக் கொண்டு பரப் ப்ரும்மமாக உட்கார்ந்திருந்தார்.
பாட்டு கற்றுக் கொடுப்பது தான் ஜீவனம் என்று ஆகிவிட்டது. வேணு ஸார் கடைசி வரை அவரைக் கச்சேரி செய்ய அனுமதிக்கவேயில்லை. விசு சாரின் வித்வத் தெரிந்து பல இடங்களிலும் வாய்ப்புகள் வந்தன. வேணு சார் விட்டால் தானே? “என்ன அதுக்குள்ள பெரிய வித்வானாயிட்ட எண்ணம் போலிருக்கு. எல்லா இடத்திலேருந்தும் ஆள் வர்றான்கள்.” என்பார் எகத்தாளமாக. ஸரஸு மாமி பிடுங்கல் தாங்க முடியாது ஷுகர் மில்லில் கொஞ்சநாள் வேலை பார்த்தார். மில்லை இழுத்து மூடிவிட்டார்கள்.
பால் வியாபாரம் பண்ணலாமென்று இரண்டு மாட்டை வாங்கிக் கட்டிப் போட்டார். அதன் நெளிவு, சுளிவு புரியாமல் வியாபாரத்தில் நஷ்டம். மாட்டை வந்த விலைக்கு விற்றார். குழந்தைகள் இரண்டு ஆகிவிட்டன. முதல் குழந்தை பெண் மூளை வளர்ச்சி குன்றியது. பிள்ளை தறுதலை, படிப்பு வரவில்லை. சொல்பேச்சு கேட்காமல்
ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தது.
விசு சாருக்கு இது குறித்த பிரக்ஞை எல்லாம் இருந்ததா என்பது சந்தேகம்தான். எப்போதும்
பாட்டு பாட்டு பாட்டுத்தான். வாய் ஓயாமல் பாடிக் கொண்டிருப்பார்.வீட்டு வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். அப்போதும் வாய் பாட்டை முணு முணுத்தவாறே இருக்கும். அல்லது ஏதாவது கற்றுக் கொண்டிருப்பார்.
பேனாவை எடுத்தால் ஸ்வரங்கள் எழுதிக் கொண்டிருப்பார். வேணு ஸாருக்குத் தெரியாமல் சமணப் பள்ளி போய் சீனு சாரிடம் அபூர்வ கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டார்.
ஸரஸு மாமிக்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை. ஜீவனோபாயத்துக்கான
வழி பிறக்கவேயில்லை. பிறந்த வீட்டு வசதியில் தான் புகுந்த வீடும் ஏதோ ஒப்பேறிக் கொண்டிருக்கிறது. வேணு சாரிடம் போய் “மாமா! இத்தனை நாள் உங்களையே நம்பி இருந்துட்டார். நீங்கதான் வழி பண்ணணும்” என்றாள். வேணு சார், விசு சாரைக் கூப்பிட்டு “பாரு, உன் பெண்டாட்டி நான் என்னமோ உன் வாழ்க்கையை நாசம் பண்ணினாப்ல பேசறா. இனிமே உன் வழியை நீ பாத்துக்கோ. இங்க வராதே.” என்றார். விசு சார் அசட்டுச் சிரிப்புடன் நகர்ந்து விட்டார்.
ஆனால் அதற்குப் பின் வேணு சார் வீட்டுக்குப் போவதை நிறுத்திவிட்டார் என்றாலும்
அப்படி ஓர் குருபக்தி. எப்போது பார்த்தாலும் “அவர் போட்ட பிச்சை” என்பார். நாளாவட்டத்தில் ஆராய்ச்சி செய்கிற மாணவர்கள், சங்கீதத்தில் அபூர்வமான
நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வருகிறவர்கள் எவர் வந்தாலும் வேணு சார் நேரே விசு சாரிடம் அனுப்பி விடுவார்.
ஸரஸு மாமி சும்மா இருக்கவில்லை. புருஷனை எப்போது பார்த்தாலும்
‘சமர்த்து போறாது’ என்று கரித்துக் கொண்டிருந்தாலும் அங்கே சொல்லி இங்கே சொல்லி கச்சேரி ஏற்பாடு செய்வதற்கு முயன்றாள். நல்லூரில்
என்ன பெரிய சபாவா வாழ்கிறது? அங்கங்கே நாள் கிழமை என்றால் கோயில்களில் கச்சேரி நடக்கும். கோயில் கச்சேரிகள் பாதி தேங்காய் மூடிக் கச்சேரிதான். எங்காவது பணம் கொடுக்க வந்தாலும் விசு சார் அங்கேயே அதை உண்டியலில் போட்டு விட்டு வந்து விடுவார்.
அங்கே சொல்லி இங்கே சொல்லி சாருக்கு மாமி ரேடியோவில் குரல் தேர்வுக்கு ஏற்பாடு செய்தாள். இவர் குரல் தேர்வுக்குப் போன அன்று நிலையத்தில் கரண்டு போய் விட்டது. ‘பின்னர் சொல்லி அனுப்புகிறோம்’ என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். அதோடு முடிந்தது ரேடியோ குரல் தேர்வு கதை.
மாணவர்கள் மட்டும் எங்கிருந்தோ எல்லாம் வந்தார்கள். எல்லோருக்கும் உரைத்துப்
புகட்டினார். சரளி வரிசை கற்றுக் கொள்கிற வாண்டுகளும்
விவாதி ராகங்கள் ஆராய்ச்சி செய்கிற மாணவர்களுக்கும் அவருக்கு ஒன்றுதான். எல்லோரிடத்திலும்
ஒரே ஈடுபாடுதான். ஒருவரிடம் பதினைந்து ரூபாய் தான் ஃபீஸ் வாங்குவார். அதற்கு மேல் யாராவது கொடுக்க முயன்றாலும் மறுத்துவிடுவார். விஜயதசமி அன்று மட்டும் போனஸ் மாதிரி பதினைந்து ரூபாய் வாங்கி கொள்வார். அதையும் சுண்டல் இத்யாதிகளுக்குச்
செலவழித்து விடுவார்.
பட்டணத்தில் கொடி கட்டிப் பறக்கும் ராமகோவிந்தன் விசு சாரின் சிஷ்யன்தான் நல்ல உயரம். பறங்கிப் பழம் மாதிரி நிறம். நெற்றியில் ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொண்டு மயில் கண் வேஷ்டியுடன் மகாவிஷ்ணு மாதிரி இருப்பான். வெளிநாட்டுப் பயணங்கள் என்ன, ஒலிப் பேழைகள் என்ன, சீசனில் மாதம் பூராக் கச்சேரி என்ன என்று ஒரே அமர்க்களம் தான். இத்தனைக்கும் ஸ்ருதி சற்று முன்னே பின்னே தான். என்னவோ அவன் பூர்வ ஜென்மப் புண்ணியமோ என்னவோ அப்படி ஒரு ப்ரக்யாதி - மூன்றாம் வரும் ‘சங்கீத சாம்ராஜ்ய சிரோன்மணி’ பட்டம் கொடுத்தார்கள். சாரிடம் ஆசிர்வாதம் வாங்க வந்திருந்தான்.
கோவிந்தராவ் விசு சாரிடம், “ஏண்டாப்பா! அவன்தான் நல்ல செயலா இருக்கானே? அவனை வெச்சுண்டு பட்டணத்தில் ஏதாவது சான்ஸ் தேடப்படாதா? அவன் சொல்றதைக் கேக்க உலகமே காத்துண்டிருக்க
மாதிரி இருக்கே. உன்னைத் தன் குருன்னு நாலு பேர்கிட்ட அறிமுகம் பண்ண மாட்டானா?” என்றார்
விசு சார் ஒரு அசட்டுச் சிரிப்புடன், “மூணாம் வருஷம் விஜயதசமிக்கு வந்திருந்தான். குரு தட்சணையோட, ஒரு பத்தாறு வேஷ்டி அங்கவஸ்த்ரம் வெத்தலை பாக்கு பழம் எல்லாம் எடுத்துண்டு வந்து நின்னான். இவன் வந்திருக்கான்னு
வீட்டுல கூடம் கொள்ளாத கூட்டம். ஏதாவது பாடுன்னேன். பூர்வி கல்யாணி ஆலாபனை பண்ண ஆரம்பிச்சான். சூடு பிடிக்க ஆரம்பிச்சுது. எல்லோரும்
தலையை ஆட்டிண்டு கேட்டுண்டிருந்தான்கள்.
பயல் பூர்வி கல்யாணிலேயிருந்து
கமனாஸ்ரமத்துக்குப் போயிட்டான். இவன் பாட்டு இந்த லட்சணம்!
நான் வாயை மூடிண்டுருந்திருக்கலாம், மெதுவா “டேய்! கமனாஸ்ரமம்டா!” அப்படீன்னேன்.
ஒரே நிசப்தம். பயல் சடார்னு எழுந்திருந்துட்டான். “மாமா! கிளம்பறேன் டயம் ஆயிடுத்து. ஆசிர்வாதம் பண்ணுங்கோ‘’ன்னு நமஸ்காரம் பண்ணிட்டுப் போனவன்தான் அப்புறம் ஆளையே காணும். இவன்ட்ட போயா நிக்கச் சொல்றேள்?” என்றார்.
கோவிந்தராவ் பெண் ஒரு முஸ்லீமுடன் ஒடிப்போன போது விசு சார் கோவிந்தராவ் வீட்டிற்கு வந்து கையைப் பிடித்துக் கொண்டு அழுதார். “மாமா! உங்களுக்கு ஒரு மாதிரி கஷ்டம். எனக்கு ஒரு மாதிரி கஷ்டம்.” அப்போதுதான் விசு சார் பையன், ரயிலில் தலையைக் கொடுத்ததும்,
பையன் போன ஏக்கத்தில் சரஸு மாமி போனதும் நடந்திருந்தன.
மாமி போய் இறந்து போன பையனின் கிறிஸ்துவ மனைவி பெண் குழந்தையுடன் விசு சார் கூட இருக்க வந்துவிட்டாள். அந்தக் குழந்தை சங்கீதத்தில் பெரிய ‘மழலை மேதை’ என்று விசு சார் கண்டுபிடித்து அதற்கு சங்கீதத்தை உரைத்துப் புகட்ட ஆரம்பித்தார். மாட்டுப் பெண்ணுக்கு
விசு சார் பழக்க வழக்கங்கள், பாட்டு வழிபாடு எல்லாம் வேம்பாய்க் கசந்தது. அவள் தன் பாட்டுக்கு பெண்ணை மாதா கோயில் சங்கீதம், சினிமாப் பாட்டு என்று பழக்கிவிட்டு விட்டாள். அந்தப் பெண்ணும் தொலைக்காட்சி சானல் ஒன்றில் போய் முதல் பரிசு வாங்கியது. அதன் பின்னர் அம்மாவும், பெண்ணும் விசு சார் கெஞ்சிக் கேட்பதைப் பொருட்படுத்தாது
பட்டணத்தோடு போய் விட்டார்கள்.
மனைவி போய், பையன் போய், மாட்டு பெண், பேத்தி பட்டணம் சென்ற பின் மூளை வளர்ச்சி குன்றிய பெண்ணும் போய்ச் சேர்ந்தது. இதெல்லாம் நடக்கும் போது சங்கீதத்தை மட்டும் விசு சார் விடவேயில்லை. கற்றுக் கொள்வதிலாகட்டும் கற்றுக் கொடுப்பதிலாகட்டும்
சருகு போல் இருந்தவர் தளிர் போல் ஆகிவிடுவார். வீடு கொள்ளாத மாணவர்கள், காலையிலிருந்து மாலை வரை வகுப்புகள். முகத்தின் மலர்ச்சி கூட மாறவில்லை. எப்போதாவது சலிப்பு வரும் “என்னத்தைக் கண்டேன் இத்தனை நாளும் இதைக் கட்டிக் கொண்டு அழுததில்? யாராவது ஏதாவது விருது கொடுத்தார்களா?” என்று தோன்றும். யாராவது வந்து ஏதாவது சந்தேகம் கேட்பார்கள். மறுபடி மலர்ச்சியுடன் ஆரம்பித்து
விடுவார்.
அன்று கோவிந்தராவ் பஜனையில் நல்ல கூட்டம். தெரிந்தவர், அறிந்தவர்
கூட்டிக் கொண்ட வந்தவர் என்று ஏகப்பட்ட பேர். மடி மாமிதான் வழக்கமாய் சுண்டல் செய்வாள். ஆட்களைப் பார்த்து மாமிக்கே கவலை வந்துவிட்டது. பஜனை ஆரம்பித்துக் களை கட்ட ஆரம்பித்த போது விசு சாரை நாணா கையைப் பிடித்துக் கூட்டி வந்தான். அப்போதெல்லாம் அவருக்குக் கண் சரியாக தெரிவதில்லை. காதும் மந்தம்.
சூடு பிடித்தவுடன் த்யான ஸ்லோகங்கள் கட்டம் வந்தது. “விசுவை பாடச் சொல்லு” என்றார் கோவிந்தராவ். விசு சார் எதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.
வாய் ஓயாமல், என்ன முணுமுணுக்கிறார் என்று கண்டு பிடிக்கவும் முடியவில்லை. நாணா “வேண்டாம் மாமா விட்டுருங்கோ ரெண்டு நாளாவே ஒரு மாதிரித் தனக்குத் தானே பாடிண்டிருக்கார் என்னன்னு புரியலை. நாம சொல்றது புரியறதான்னும் தெரியலை. ‘பஜனைக்குக் கூட்டிண்டு
போ'ன்னு பிடுங்கி எடுத்துட்டார், அதான் கூட்டிண்டு வந்தேன்.” என்றான்.
“சீமாச்சு! பாடுவாண்டா, கொஞ்சம் காது கேக்கலையோ என்னவோ! காதில் சொல்லிப் பாரேன்.” என்றார் கோவிந்தராவ்.
சீமாச்சு எழுந்திருந்து விசு சார் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு உரக்கக் காதில் “பாகவதர்வாள்! த்யான ஸ்லோகம் பாடறேளா? விஷ்ணுவைப் பத்திப் பாடுங்கோ” என்றார். விசு சாருக்கு உறைத்ததா என்றே தெரியவில்லை. சீமாச்சு உதட்டைப் பிதுக்கினார். “சரி விட்டுடு” என்று கோவிந்தராவ் ஜாடை காட்டினார். ‘வேறு யார் பாடுவார்கள்?’ என்று கும்பலை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க
ஒரு நிமிஷம் மௌனம் நிலவியது. ஸ்ருதி சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
திடிரென்று விசு சார் ஆரம்பித்தார். எல்லோருமே திடுக்குற்று நின்றுவிட்டார்கள்.
காம்போதியை எடுத்து மின்னல் அடித்த மாதிரி ஒரு ஆலாபனை பண்ணினார். ராக லட்சணங்கள் பட்டுத் தெறிக்கிறார்
போல் விழுந்தன. எல்லோரும் “ஹரி ஹரி! என்று ஆஹாகாரம் செய்தார்கள்.
நிதானமாக “ஓ ரங்கசாயி” பாடினார். அமர்ந்த பாட்டு அமரிக்கையான சங்கீதம். சங்கதிகள் விஸ்தாரமாய்
விழுந்தன. ராவணன் சிவனை அர்ச்சிக்க காம்போதி பாடினான் என்கிறார்களே, அதெல்லாம் அன்றைய விசு சாரின் காம்போதிக்கு உறைபோடக் காணாது.
“ரங்கசாயி! ஓ என்று கதறுகிறேனே உன் காதில் விழுவில்லையா? வைகுந்தம் வேண்டாம்,
லஷ்மி இருக்கிற ஸ்ரீரங்கம் போதும் என்று இங்கே வந்து உட்கார்ந்திருக்கும் நீ சொல் - என்னுடைய துன்பங்கள் எப்போது முடிவுக்கு வரும்? மற்றவர் செல்வம் அடைவதைப் பார்த்து வயிறெரியும் மனிதர்களின்
மத்தியில் என்னை இன்னும் எத்தனை நாள்தான் வைத்திருக்கப் போகிறாய்? என்னுடைய இந்தப் பரிதாப நிலையிலிருந்து உன்னிடம் ஆறுதலையும், விடுதலையையும் வேண்டுகிறேன்.
உன் மாலையணிந்த கல்யாணக் கோலத்தை எனக்குக் காண்பி.”
பாடினது தியாகராஜரா? விசு சாரா? கேட்டவர் அனைவரும் கண்ணீர் பெருகக் கேட்டுக் கொண்டு மெய் மறந்து போயிருந்தனர். சற்று பொறுத்தே சுய நினைவுக்கு வந்த கோவிந்தராவ் “நம்ம தர்பார்ல இவன்தாண்ட ராஜா, எவன் இவனுக்கு சன்மானம் பண்ணினா என்ன பண்ணாட்டி என்ன? நம்ம கொடுப்போம்டா இவனுக்கு விருது.” என்று வெற்றிலைத் தட்டை எடுத்து வரச்சொன்னார்.
குமார் மிருதங்கத்தை நிறுத்திவிட்டு பையில் கையை விட்டு இருபத்தைந்து ரூபாய் பணத்தை எடுத்து வைத்தான். எல்லாருமாக
விசு சார் பக்கத்தில் போய் “பாகவதர்வாள்! எடுத்துக்கோங்கோ.”
என்று தட்டை நீட்டினார்கள். நாணா உதவ விசு சார் பழைய அதே அசட்டுச் சிரிப்புடன் வெற்றிலை பாக்கை எடுத்துக் கொண்டார்.
அன்றிரவு து£க்கத்திலேயே விசு சாரின் பிராணன் போய்விட்டது.
லேடீஸ் ஸ்பெஷல், தீபாவளி மலர்,
2014