வியாழன், 12 மே, 2016

அம்மாவுக்கு-கவிதை- கணேஷ் கிருஷ்ணமூர்த்தி



கருத்த இந்த இரவு முகத்திலெங்கும்
அம்மை வார்த்தாற்போல் நட்சத்திரங்கள்

அம்மா....

முன்னம் அப்பழைய நம் வீட்டுக்கூடத்தில்
உன் குழந்தைகள் அனைவருக்கும் அம்மை வார்த்து
அடுத்தடுத்துப் புரண்டிருக்க,
சிறகு வீச்சிலிருந்து எழுந்தாற்போல்
உன் பருத்திப் புடவையிலிருந்து
புறப்பட்டதோர் மெல்லிய தென்றல் ஒன்று
தெறித்த எங்கள் புண்களை ஆற்றிக் கொண்டிருந்தது...
பின்பு, எங்கள் நிசப்தத்தை
அந்நோயுற்ற நாட்களில் உன் மெட்டிச் சத்தம்
அளவிட்டுக் கொண்டிருந்தது.

வெண்பனி போல் மறைந்துவிட்ட
இத்தனை வருடங்களுக்குப் பிறகு
நான் இன்று தனித்திருக்கிறேன்.
வேறுபட்டு இருக்கிறேன்
என் ஆத்மனுக்குச் சற்றே அம்மை போட்டிருக்கிறது
ஆயினும் சில தருணங்களில்
உருவமற்ற இந்த என் இரவில் கூட
இதோ என் கண்ணெதிரில்
உன் சின்னஞ்சிறு அருட்சிறகுகள்
இயங்கிய வண்ணம்
இப்பொழுதும் நீ திரிந்து கொண்டுதான் இருக்கிறாய்

என் உலகைத் திருத்திக் கொண்டுதான் இருக்கிறாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...