வியாழன், 12 மே, 2016

கவிதைகள்-கணேஷ் கிருஷ்ணமுர்த்தி



ஒற்றுமைகள்!

உறைந்த ரத்தநிற காலி ரயில் பெட்டிகள்
கைவிடப்பட்டு, பாதி ஆளுயரப் புல்வெளியில்
கால் புதைத்த கனத்த பிசாசுகள்;
இரும்பாக இருநூறு ஆண்டு
ஸ்தம்பித்து நகராமல்
நின்று கொண்டே இருக்க வல்லவை.

ஆயினும், மனம் 'பாவம் அப்பெட்டிகள்' என்கிறது.
தனக்குப் பரிச்சயப்பட்ட மனித வாழ்வின்
சில உதாசீனங்களையும் வியர்த்தங்களையும்
ஒரு விநாடியில் நினைவு கூர்ந்து,
உண்மை அப்படியில்லை என்றாலும்...

 கடல் நிலவு!

கடலின் ஆயிரம் உதடுகளில்
மழலையாகிறது நிலவு
நிலவின் நிமிர்ந்த ஓர் ஒளிச்சொல்;
அலை ஒலிபெருக்கிகள்;
என்னருகிலிருந்து பார்க்கும்
அந்தச் சிறுமியின் கண்களில்
ஈர வெள்ளி பனிக்கிறது -
அவளின் துயரம் எதுவாயிருக்கும்?

கடின இரவு!
கடலின் ஆழ்ந்த இயதத்தினுள்
ஓர் தழுதழுப்பு உறங்குகிறது
தள்ளிப்போடப்பட்ட ஓர் தேம்பல்
ஆயினும் மறுபடி மறுபடி
அக் கடற்சோகம்
கரைக் கண்களோரம்
உகுக்கப்பட்டு
வழிந்தோடுகிறது.
கண் திறந்து உறக்கத்தில்
மீன்கள் - அவைகளின் வழியில்
ஏதுமறியாது.
நட்சத்திரங்கள்
தம் இருள் காம்புகளின் உச்சியில் நின்று
சந்தேகிக்கின்றன
நாம் போக வேண்டும்
கடினமான இந்த இரவில்
என் மகளே,
நேரம் 11.00 ஆகிறது...

ஏரியும் அதன் கரையும்

எண்ணம், உவமை, உன்னத உணர்வுகள் -
பரந்த ஏரியின் பட்டுத் தோல்மீது
எறியப்பட்ட கூழாங்கற்கள் போல்
இவை மனம் எனும் ஊமை மேதையை
பேசச் சொல்லித் தூண்டுகின்றன;
நிறமின்றி நிரம்பியிருக்கும் மாலை நேரம்
ஏரியின் அந்தரங்கத்தில் அழுங்கியிருக்க
சில கேள்விகளுக்கு பதில் சொல்ல எத்தனிக்கிறேன்;
பகிர்தலில் நாம் சிதறி விடுகிறோம்.

தம் கேள்விகளை சின்னஞ்சிறு அலைகள்
அமைதி கொண்ட கரையின் மேல் கொணர்ந்து
முட்டுகின்றன. ஆயினும், கண் தூக்கிப் பார்க்கையில்
ஏரியின் மத்தியில், தூரத்தில்,
பதில் ஏதும் கேளாமல் தண்ணீர்

கரும்பச்சையாகக் கல்லாக அமர்ந்திருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...