ஒரு வெகுஜனப் பத்திரிக்கை
ஆசிரியர் என்னிடம் கொஞ்ச நாள் நட்பாக இருந்தார். (இப்போது அவர் என் முகத்தில் விழிக்கக்கூடத்
தயாராக இல்லை.) அவர் இந்தப் புல்லின் இதழ் நாவலை மிகவும் சிலாகித்துச் சொல்லுவார். ந.
சிதம்பர சுப்ரமணியனின் இதய நாதத்தையும் அவர் மிகவும் சிலாகித்துச் சொல்வதுண்டு. சங்கீதத்துக்கும்
அவருக்கும் ஸ்நாநப்ராப்தி கிடையாது. என்றாலும்கூட மரபான விஷயங்களைக் கண்மூடித்தனமாக
ஆதரிப்பவர் என்பதால் அவருக்குக் கர்நாடக சங்கீததத்தின் மேல் பெரிய பிரேமை உண்டு.
தற்செயலாக ‘இதயநாதம்’ படித்த கையுடன் புல்லின்
இதழ்களும் படிக்கக் கிடைத்தது. அந்தக் கால நண்பர் மிகவும் சிலாகித்துச் சொல்லி இருக்கிறாரே
படித்து வைப்போம் என்று படித்து வைத்தேன்.
சங்கீத நாட்டமுள்ள, க்யாஸ் லைட் தூக்குகிறவனின்
மகனான ஹரி, தற்செயலாக சுப்பராம பாகவதர் என்கிற சங்கீத வித்வானிடம்
விதி வசத்தால் வந்து சேருகிறான். அவனைத் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு குருகுல வாசம்
போல் சங்கீதத்தை உரைத்துப் புகட்டுகிறார் பாகவதர். பாகவதருக்கு இரண்டு பெண்கள் - மூத்த
பெண் இளம் விதவை. இளைய பெண்ணுக்கு ஹரி என்றால் இளக்காரம் - அதே நேரம் அவன் சங்கீதத்தின்மீது
அளவு கடந்த ப்ரேமை.
இதைத்தவிர பாகவதரிடம்
சிஷ்யையாக வந்த பெண் மனைவியாக, அவர் மூலமாகப் பிறந்த பெண் வேறு. ஹரி அந்தப் பெண்ணுக்கு
சங்கீதம் கற்றுக் கொடுக்கிறான். இதைத் தவிர தஞ்சாவூரைச் சேர்ந்த மராட்டியக் குடும்பத்தைச்
சேர்ந்த இளம்பெண் ஒருத்திக்கு வேறு சங்கீதம் சொல்லித் தருகின்றான். அவளுக்கும் ஹரியின்
மீது ஈர்ப்பு முளை விடுகிறது.
சங்கீதத்தைச் சாக்காக
வைத்துக் கொண்டு நாலு பெண்களின் மன அவசங்களைச் சுற்றி வருகிறது கதை. பாகவதர் ஜாதி எல்லாம்
பார்க்காமல் ஹரியுடன் சமபந்தி போஜனம் செய்கிறார் என்கிற ‘சமூகத் தாக்கம்’ வேறு. குருபக்தி,
ஹரியை எடுத்து வளர்த்து வித்வான் ஆக்கிய நன்றியுணர்ச்சி போன்றவையும்
கூடவே. இவையெல்லாவற்றினூடே கதையின் அடி நாதமாகப் பால் ஈர்ப்புத்தான் நாவல் முழுவதும்
விரவியிருக்கிறது. இந்த நான்கு பெண்களில் கடைசியில் ஹரி யாரை மணக்கிறான் என்கிற ஆவலை
ஏற்படுத்துகிற வகையில்தான் செல்கிறது கதை.
நான் எதிர்பார்த்ததெல்லாம்
ஹரி தன்மையாகவும் அநுதாபத்துடனும் பழகுகிற மூத்த பெண்ணை மணந்து கொள்வான் என்பதுதான்.
அடுத்த எதிர்பார்ப்பு இரண்டாம் மனைவி பாகவதர் சேர்த்துக் கொண்டதால் அவருடைய பெண்ணை கல்யாணம் செய்து
கொண்டால் சமூக நீதி நிலை நாட்டப்படும்; கட்டுப் பெட்டித்தனத்துக்கும் ஆபத்தில்லை.
மராட்டியப் பெண்ணுக்குப் பெரிய வாய்ப்பு இல்லை. அவள் கிட்டத்தட்ட ஹரியை வசப்படுத்த
முயல, ஹரி மறுக்க, அத்துடன் அவள் ஒதுங்கிவிடுகிறாள்.
கடைசியாக ஹரி மீது சதா எரிந்து விழுந்து கொண்டிருக்கும் பாகவதரின் இரண்டாம் பெண்ணுக்கே
அந்த வாய்ப்பு கிட்டுகிறது. அத்துடன் முடிந்ததா என்றால் திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண் குழந்தைப் பிறப்பில் ஜன்னி
கண்டு இறந்து போகிறாள். அத்துடன் முடிகிறது கதை. இரண்டாம் மனைவியின் பெண்ணை மணந்து
கொண்டதை இரண்டாம் பாகம் எழுதியிருந்தால் காண்பித்திருப்பார் என்கிற வாசகனின் ஊகத்துடன்
முடிகிறது கதை.
இந்தக் கதை மட்டும்
தி. ஜானகி ராமனிடம் கிடைத்திருந்தால் அடி பின்னியிருப்பார். மராட்டியப் பெண்ணிடம் உடல்
உறவு, இரண்டாம் பெண்ணிடம் காதல், மூத்த பெண்ணுடன் கல்யாணம்,
பாகவதரின் இரண்டாம் மனைவியின் பெண்ணுடன் கள்ள உறவு என்று பிய்த்து உதறியிருப்பார்.
போனால் போகிறது என்று பாகவதரின் மனைவிமார்களை மட்டும் விட்டு வைத்திருப்பார்.
நீலமணியின் எழுத்து
நல்ல சீரான ஆற்றோட்டமான எழுத்து. அனுபவத்தில் தோய்ந்த எழுத்தா என்று கொஞ்சம் சந்தேகமாகத்தானிருக்கிறது.
சங்கீதத்தைப் பற்றி என்றால் அந்த அநுபவத் தோய்வு இருக்க வேண்டாமா? ஆங்காங்கே சங்கீத நுட்பங்கள்
குறித்த விவரிப்புகள் விரவியிருந்தாலும் அதில் தோய்ந்த அனுபவமாக அது வெளிப்பட அதற்கு
இரண்டு விஷயங்கள் மிகவும் அத்தியாவசியமானவை. ஒன்று அதில் நேரடி அநுபவம் இருக்க வேண்டும்.
அப்படியில்லையென்றாலும் அதன் நுகர்வு மேல் கட்டமைத்த பாவனையான
சுயப் பிரக்ஞையின் பிம்பமாவது இருக்க வேண்டும். சங்கீத ரசிகன் சங்கீத வித்வானாக ஆவிர்பவித்தது
போன்றுதான் அதுவும். நீலமணியின் நாவலில் இரண்டுமே இல்லாததால் இந்நாவலை மற்ற சாதாரண
நாவல்களுடன் வேறுபடுத்திப் பார்க்க முகாந்திரம் இல்லாது போய்விட்டது.
இதில் வரும் சங்கீதக்காரர்கள்
காசுக்கு ஆசைப்படாது ஆத்ம சமர்ப்பணமாக சங்கீதத்தைச் செய்கிறார்கள். இது உண்மையா? சமூகம் சட்டமைத்திருக்கும்
பிம்பம்தான் இது என்று தோன்றுகிறது. டாக்டர்கள் ஆசிரியர்கள் போன்றோர் மீது சமூகம் கட்டமைத்திருக்கும்
பிம்பம் போன்றது தான் இதுவும். எல்லாத் துறையினரைச் சேர்ந்தவரும் நல்ல வரும்படியுடன்
வளப்பமாக இருக்க பாட்டு வாத்தியார்கள் மட்டும் நிஷ்காம்ய கர்மமாக வேலையை, சங்கீதத்தைச்
செய்து கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறதா சமூகம்?
நானே ஐந்து வருடங்கள்
சங்கீதம் கற்றுக்கொண்டேன். பலவித அநுபவங்கள் என் முதல் பாட்டு வாத்தியார் முதல் வகுப்பிலேயே 'சங்கீதம் தெரிந்தால் மட்டும் போதாது; இங்கிதமும் தெரிய வேண்டும்' என்றுதான்
ஆரம்பித்தார். அவருக்கு சிஷ்யர்களை அடக்கி ஒடுக்கித்தான் முன்னுக்குத் கொண்டு வரவேண்டும்
என்கிற எண்ணம் இருந்தது.
அவருக்கே எழுபது
வயதில் சான்ஸ் கிடைக்காத நிலை. நல்ல வேளையாக அவர் சங்கீதத்தை ஜீவனோபாயமாக வைத்துக்
கொள்ளவில்லை. அவருக்கு நான் கொடுத்த ஃபீஸ் ரூ.25 மட்டுமே. ‘கிளாஸ்’ நடக்கவில்லை என்றால் வாங்கிக்
கொள்ள மாட்டார். பின்னர் நானாக அதை ரூ.30 ஆகவும் ரூ.50 ஆகவும் உயர்த்தினேன். அவரிடம்
தான் அதிகபட்ச கீர்த்தனங்கள் கற்றுக் கொண்டேன். ஆனால் அவருக்குக் கர்நாடக சங்கீதத்தின்
தூணாக உள்ள ஸ்வரஞானம் என்பதை எனக்கு எப்படி உண்டாக்க வேண்டும் என்கிற வழி தெரியவில்லை. அதற்குள்
ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன.
அவரிடம் கற்றுக்
கொண்ட போதே பஞ்சரத்ன கீர்த்தனை கற்றுக் கொள்ளலாம் என்று வேறு ஒரு ஆசிரியரிடம் சென்றேன். குடுமி
வைத்துக் கொண்டு தீயாகராய ஸ்வாமி மாதிரியே இருப்பார். குழந்தைகள் கிடையாது. அவர் வாங்கிக்
கொண்ட பீஸ் ரூ.15 மட்டுமே. மிலிடரி ஜெனரல் போல் வகுப்பு நடத்துவார். அவர் வகுப்பு எடுப்பதற்குமுன்
ஒரு அரை மணி முக்கால் மணி பெரிய லெக்சர் அடிப்பார். சங்கீதம் பற்றி மட்டுமல்லாது ஆன்மிக
சமூகம், வேதம் குறித்த தன் அபிப்பிராயங்களை விஸ்தாரமாகச் சொல்லுவார். பயங்கரக் கோபம்
வரும். ஏதாவது தவறாகப் பாடிவிட்டால் தொலைத்து விடுவார். எனக்கு அவர் முன்னால் உட்கார்ந்து
கொண்டாலே நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டுவிடும். குரலே எழும்பாது. அவ்வளவு கெடுபிடி. இப்படி ஒடிற்று கொஞ்சநாள் -
இதற்குப்பின் மும்பையில்
ஒரு சபாவில் சங்கீதத்துக்குப் போய்க் கொண்டிருந்தேன். ஐம்பது வயது மாமி சொல்லிக் கொடுத்தார்.
நல்ல வித்வத் உள்ளவர். அருமையான குரல் - பாடாந்தரம் - என்ஸி வசந்த கோகிலம் மாதிரிப்
பாடுவார் - ஒரு விழாவில் நாங்கள் எல்லாம் பாட வேண்டி வந்தபோது பாரதியார் பாடல் ஒன்றுக்கு
(‘ஆசை முகமறந்துபோச்சே’) அரைமணி நேரத்தில் அவர்
‘பரபர’ வென்று ராகமாலிகையில் ‘ம்யூசிக்’ போட்ட ரஸவாதத்தைப் பார்த்தேன்.
இந்த அம்மையாரும்
சளசளவென்று வகுப்பு எடுக்குமுன் பேசிக் கொண்டிருப்பார். திருமணம் செய்து கொள்ளவில்லை.
தனிக்கட்டை. ஏதாவது விபத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார் - வகுப்பு முடிந்ததும்
“என்னைக் கொஞ்சம்
ஸ்டேஷன்ல கொண்டே விட்டுடறேளா?” என்பார். மின்சார ரயில்
நிலையம் பத்து நிமிட நடையில் - கொண்டு போய் விட்டுவிட்டு நான் வீட்டிற்குச் செல்வேன்.
பாதுகாப்புக்காக
அதுவும் என்னைப் போய் துணைக்கழைத்துக் கொண்டு அவர் ஏன் சென்றார் என்பது எனக்கு இன்றுவரை புரியாத
மர்மமே. அது கொஞ்ச நாள்தான் ஓடிற்று. அதற்குள் எனக்கு இரண்டு குழந்தைகள் ஆகிவிட்ட படியால்
கவனமெல்லாம் திரும்பி விட்டது. சங்கீதம் முடிவுக்கு வந்தது.
இதற்குப் பின்னர்
சென்னை வந்தபின் என் நிமித்தமாகவும் என் பிள்ளை நிமித்தமாகவும் பல சங்கீத வித்வான்களைச்
சந்தித்தேன். பணத்துக்கு அலைபவர்கள், புகழுக்கும் பேருக்கும் ஆலாய்ப்
பறக்கிறவர்கள், மாணவர்களை வேலைக்காரர்களாகவும் அடிமைகளாகவுமாக
நடத்துகிறவர்கள், குடிகாரர்கள், ஸ்தீரி லோலர்கள், ஓரினச்
சேர்க்கையாளர்கள் என்று பலதரப்பட்டவர்கள். இவர்களுக்கும் மற்ற மனிதர்களுக்கும் இருந்த
ஒரே வித்தியாசம் இவர்கள் கடவுள் நாமங்களை பாடல்களில் உச்சரித்துக் கொண்டிருந்தது என்பது மட்டுமே. இவை எதுவுமே வெளியுலகத்திற்குத் தெரிவதில்லை.
பிள்ளைகளுக்குப்
பாட்டு கற்றுக் கொடுக்கப் போன ஒரு வித்வான் அந்தப் பிள்ளைகளின் அன்னையை மயக்கித் தன்னுடன்
கிளம்பிக் கொண்டு வந்து விட்ட கதையை நான் அறிவேன். இப்பேர்பட்ட மகாநுபாவர்கள். இவர்களின்
செயல்கள் அனைத்துமே குருபக்தி என்கிற பெயரிலும் பயத்திலும் விளிம்புக்கு வராமலே அமிழ்ந்து
விடும் அவலம் பல தலைமுறைகளாக நடந்து கொண்டு வருகிறது.
கே.பி. நீலமணி எழுதியது
ஒரு எல்லை என்றால் பிரத்யட்சமாக நமக்குத் தெரிவது வேறோர் எல்லை. இதைத்தான் என் அந்தரங்க
அநுபவங்கள் சுட்டுகின்றன. அப்படிப் பார்க்கும்போது நீலமணியின் நாவல் பேசப்படுமென்றால்
சங்கீதத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல்களில் ஒன்று என்கிற அளவில்தான் பேசப்படும் என்று
தோன்றுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக