செவ்வாய், 24 மே, 2016

கவிதைகள்-கணேஷ் கிருஷ்ணமுர்த்தி



உலோகங்கள்!
உலோகங்களின் உலகம் இது
செப்பு உதிர் இலைகள்
வெங்கல வானம்
தங்க நதி
வெள்ளி நிலவும்
கிழமையும்
துருப்பிடித்த இரும்பு நிற ரத்தக்கறை
பூமியின் இறுக்கத்தில்
இறுதியில் நாமும்
உலோகங்களுடன் உறங்கிவிடுகிறோம்!

தயங்கும் ஓர் நிமிடம்

தயங்கும் ஓர் நிமிடம்
தேடி வந்தடைய இத்தனை ஆண்டுகள்
குறிக்கோள்கள் குறட்டை விடும்
நன்றிரவு
அஸ்தமனத்திற்கும் விடியலுக்கும்
இடைப்பட்ட கர்ப்பக் கணங்கள்
புல்லின் மழையிலிருந்து -
மழை வரை சோகம்
மரத்துவிடுகிறது.

தந்திக் கம்பங்கள்
தம் புல் சுற்றங்களிலிருந்தும்
ஆண் குறி போல் விறைத்து
அதிர்கின்றன.

பிறப்பின் வியப்போ
இறப்பின் இழப்போ
எடுபடவில்லை.

அன்பும் அர்த்தங்களும்
பயணியின் இறக்கி வைக்கப்பட்ட
பெட்டிகள் போல் ஸ்தம்பிக்க,
குறிப்பாக எதற்காகவும்
காத்திராதவர் போல் நாம்
ஏதோ இறைவனுக்குக்கு காத்திருக்கிறோம்.

அழகிய நிமிடங்கள்!
பல நூறு ஆண்டுகள் வயதான
மலைக்கற்களால் ஆகிய இந்தச் சுவற்றின் மேல்
இளம் மழை இன்று
சாய்வாகக் காற்றில் நெளிந்தபடி விழுகிறது.

சுவர் மேல் படர்ந்த
புத்தம் புது பச்சைக் கொடியின் இலைகள்
உடைந்த தண்ணிர்க் குழாய் ஓன்றிலிருந்து
குதிக்கும் கனமான நீருக்கடியில்
தப்பிப்பு நாட்டியம் புரிகின்றன.
சில்றைவாய்ப் பட்டு சிதறிவிட்ட
நம்மை நான் சிந்திக்கிறேன்;
யார் சரியாக இருந்தால் என்ன?

கோர்வையான மழை மாலை
நிலத்தில் விழுந்து உடைகின்றது.

மனது குறுகுறுக்கும் சமயங்களிலும்
துருப்பிடித்த இடங்களிலும்
அழகிய நிமிடங்கள்
அவ்வப்போது நிகழ்கின்றன!

தொலைப்பு!
பத்திரமாக அந்நாளில்
மனத்தில் வைத்துப் பூட்டிய
மந்திரங்கள் காணவில்லை;
மறப்பதற்காகத்தான்
நாம் நினைவு கொள்கிறோம்;
பத்திரப் படுத்துவதன் மூலம்
அப்புறப் படுத்திவிடுகிறோம்.

குதிகால் செய்த
குழிவில் திரண்ட கடல் நீர்
மறுபடி வெளி வடிகிறது.
நாம் சல்லடைப் பருவத்திற்கு
உயர்கிறோம்.

கவனங்களும் காட்சிகளும்
விரல் வழித்தூறும் கடல் மண்ணாக
விரயமாகி
இருளிள் தாழ்வாரத்தில்
இழுத்துப் போட்ட சாய்வு நாற்காலியின்மேல்
அமர்ந்தவாறு
நகரத்தின் உயிர் நாற்றத்தை
லேசாக நுகர்கிறோம்.

ஏரிக்கரையில் உட்கார்ந்து...
ஏரிப் பரப்பின் மேல் ஜாமச் சூரியனின் துகள்கள்,
இலைக் கதிர்கள்;
அளவிலாச் சக்தி ஒன்று
வரம்பினுள் வடிவம் பெற்று,
மரங்களின் முற்றுமைக்கிடையில் ஓர்
சிறு பிரும்மாண்டமாகிறது,
என் மனத்தில் சிறை புகுந்த
உலகளாகவியதோர் சித்தம் போல்;

தன்னிறைவும் தளும்பாத் தன்னடக்கமும்
மறுபடி கற்க;

கூழாங்கற்கள் சிறுவர் கைகளிலிருந்தும்
தவளைத் தாவலில் புறப்படுகின்றன;

எவரொருவர் புன்னகையும் நன்மதிப்பும்
தேவைதானோ?
நம் வல்லமைகளை நாம் கற்பதற்கு
முன்னரே பிறருடன் பகிர்ந்து கொள்ளும்
கட்டாயம் இன்றி
நாம் சற்ற நேரம் இந்த ஏரியின்
கரையில் உட்கார்ந்திருப்போம்!

இறைவனாவதைப் பற்றி...

சென்றடைபவன் தன் பிரயாணத்தை ஏன்
மதிக்கக்கூடும்?
இலையுதிர்காலம், மழுங்கிய மஞ்சளாகப்
பழுத்திருக்கும் நினைவுகள்,
சிறு கல்வெட்டுகளின் அடியில் கூடக் காலம்
சலசலத்து விரைந்து கொண்டிருக்கிறது!

உலகை இந்த இடத்தில்நான் எனக்குப் பிரியமான
இந்த மரத்தின் கீழ் நிறுத்தி விடுகிறேன்;
இயந்திரம் ஒன்று என் விரல்பட
ஸ்தம்பிக்கிறது...
சில புது ஒலிகள் பிறக்கின்றன;
பெயர் தெரியாத பறவைகள்
பெயர் தேவையற்ற நிர்மூலம்
புறக்ள அடிநுனியில், மஞ்சளாகத் தேய்கின்றன.

சுரக்கும் நிலவொளிக்கும்
சுயநினைவிழப்பிற்கும் இடைப்பட்ட
ஒரு விநாடி என்னையும் இறைவனாக்குகிறது!

கதிரவனைப் பின்பற்றி!

கருத்த ஏழு மணியளவில்
இரவு புகுந்த கதிரவன்,
அவளின் தொடைகளுக்கிடையில்
கிட்டத்தட்ட ஒன்பது மணிநேரம் புணர்ந்து,
வானத்துச் சாலைகளில்
வெள்ளைச் சட்டை அணிந்து
வெளியேறுகிறான்;
தன் ஊக்கம் நிறைந்த உள்ளுணர்வுடன்
எனக்கோர் ஒளி நிறைந்த நாள் சமைக்கிறான்:

எனக்கும் அதே ஆவலும் நிலையும் தான் -
பெண்ணே வா என்னருகில்,
நாளை இவ்வுலகைச் சிறு அளவிலாயினும் நான்
புதுப்பிக்கக் கடமைப்பட்டவனாயிருக்கிறேன்!

அவரவருக்கு அவரவர்!

தன் கதையின் நள்ளிரவில்,
ஓர் கிழ எழுத்தாளன்
தான் சிருஷ்டித்த சிறுவர்களால்
தின்னப்படுகிறான்.

அவனுக்குத் தெரியும்
இதயப்பூர்வமாக எழுத்தப்பட்ட சில கடிதங்கள்
காலை அவனுக்கு வந்த சேரும்,
என் வழியில் நான்
நீங்கள் வேறு  நான் வேறு
அவரவருக்கு அவரவர்

குப்பைகள்!

மழைக்கடியில் பிரவகிக்கும்
இந்தச் சாளரத்து நீர் அளவு போதும் இறைவன்
என் நெஞ்சத்தை அடைத்திருக்கும்
குப்பைகளை அடித்துக் கொண்டு போவதற்கு!

நீ எனும் வீதி!

உதயத் தெருக்கள்
சக்கரங்களுக்கடியில் சிக்கி
அடிபட்ட இறந்திருக்கின்றன!

வீதியின் குடல்
அதன் மற்ற உள் பாகங்களைத்
தோட்டி ஒருவன்
முனிசிபாலிடி லாரியில்
கவிழ்க்கிறான், அரைகுறையாக...

2 மணி நேரத்தில்
அலுவலகக் கால்கள் முளைத்து
முன்னேறுகின்றன!

குரோதமே காட்டாமல்
செத்திருந்த வீதியின் மேல்
மார்ச் மாத மழையின்
அன்பு உஷ்ணம் படர்கிறது!

இரவின் தொட்டிலில் நேற்றிரவு
நாம் உறங்கியிருந்தோம்!

இந்தக் காலை,
நீ இறந்த மணப்பெண்;
பகலின் அரசாங்கம்
கண்களைக் கூசச் செய்கிறது!

உன் ஆப்பிரிக்கக் குழந்தை முகம்...

காட்டிக் கொடுத்த நான்,
உன் நண்பன்தான்
ஊனமுற்ற உன் அத்தானும் கூட!

ஹைட்ரண்டுகள்!

தினந்தோறும் சூரியன்
மங்கலான மீன் போல்

மழை - நான் ப்ரமிக்க -
தன் கூந்தல்
சாலைப் போக்குவரத்துக்கிடையில்
புரளும் வண்ணம்,
என்ன நினைக்கிறாளோ?

எருமைத் தோல் வாழ்க்கை,
அதன் தங்கநிற சரீர மயிர்ச் சம்பவங்கள்;

சில நிமிடங்களை
அவை வெள்ளிப் பிரகாசிக்கும்வரை
நாம் துலக்கிப்
பளிக்கச் செய்கிறோம்!

நகர நெருப்பு விபத்துகளை முன்னிட்டு
நமது சாலைகளில் ஹைட்ரண்டுகள்
நிறத்தப்படுவது போல,
நாம் நமது இதயங்களில்
ஒரு கும்பிட்டை
நிறுத்திக் கொள்கிறோம்!

ஒன்றுமின்மை!

விநாடி முள் இடறி இடறி
தன் சுமையிலிருந்து
விடுபட முயற்சிக்கிறது!

யோசிப்பதற்கு ஒன்றுமில்லை.

விக்கிக் கொண்டே
தூங்குகிறது கடிகாரம்!

மனது சில கற்பனைகளை
வெகு தொலைவு சென்று இழுத்துக் கொண்டுவர
அக்கற்பனைகள்
அதே மனத்தின் சல்லடையின் வழியே
நழுவி, மறுபடி சிதறுகின்றன.

வெகு நாளைய சொற்பாலங்கள்
உடைந்து போய்
காரியங்கள் காரணங்களுக்குள்
மூழ்கி அமுங்கி விடுகின்றன.

மர எலும்புகள் விறைத்த நின்றபோதும்
மேலிருக்கும் இலைகள் இன்னும்
தலையாட்டிக் கொண்டிருக்கின்றன;

(மொத்தத்தில், அம்மரங்கள்
பார்க்கிசன் நோய் பிடித்த கிழவர்கள்)

சோம்பல் மரணமாக விஸ்தரித்தாலும்,
இந்த ஒன்றுமின்மை மிருதுவானது;
விண்ணில் ஒளிர்விடும் மொக்கு ஒன்றைப் போல
மனம் மறுபடி மழலை அறிகிறது.

நகரப் புறா!

இறந்த இந்தப் புறாவை எவரோ
தம் கைகளில் தூக்கி வந்து
இந்த வங்கியின் கூரைக்கடியில்
கல்தூணுக்கருகில், மூலையில்
கிடத்தியிருக்கிறார்கள், பறவை
எங்கு வீழ்ந்திருந்ததோ அந்த ஸ்தலத்திலேயே
அதை விட்டு விட மனமில்லாமல்,
தூக்கி வந்தவனின் கைச்சூடு மாய்ந்த
அந்தப் பறவையின் உடலில்
இன்னும் கைக்குழந்தைச் சூடுபோல்
கதகதற்கிறது...

வலியின் அம்பு மனத்தைத் தைக்கிறது
மாபெரும் இந்நகரின்
போக்குவரத்து நடுவில்
எங்கு இந்தப் புறாவை அடக்கம்
செய்ய இயலும்?
காலையில், அரசாங்கக் குப்பை லாரியுடன்
வந்து சேரக் கூடிய துப்புறவுத் தொழிலாளி
புறாக்கறி தின்பவனாக இருக்கட்டும்!

 நகரவாசி!
டைப்ரைட்டர்கள், வெளியில்
மழைவிடும் காரணத்தால், தாம்
மௌமாகி விடுவதில்லை!

ஜன்னல் பக்க மழையின் இடை அசைவுகள்
அசட்டை செய்யப்படும்.
இயல்பற்ற விளக்கில்
பல அடுக்கு ஆபிஸ்களில்
தன் சுமையைத் தாங்கிக் கொண்டு மனிதன்;

வயிற்றுக்காக மட்டும்தானா
இந்த அலுவல் சடங்குகள்?
இறங்கும் இந்த மழைக்கடியில்
நிரம்பும் ஓர் மண் பாத்திரமாக
உருவெடுக்க விரும்புகிறேன் நான்!

குருவிச் சொல்!

துவைத்துப் போட்ட வேட்டியாகத்
தொடுவானம்;
நகரத்தோரங்களில்
கருப்பு அசிங்கங்கள்;

மிகையாக முற்றி
அழுகும் நிலவு;
விளக்காத மழை
மனத் தரையின் மேல்;

இட மாற்றம் தேவை என்கிறது
பொய் சொல்லும் ஒரு
பெட்டைக் குருவி!
நிகழ்ச்சி!
விளக்கு போய்விட்டது;
அந்தக் கணங்களில்
நம் வாழ்வுச் சுமையின் கணம்
அதிகரிக்கிறது.

தொல்லைகளையும், சொல்லில் வராத
விம்மல்களையும்
ஆதி நிவாரணம் கொண்டு தொலைப்போமா
இவ்விருளில்?
மேனிகள் வியர்க்கின்றன.

சமீப வறட்சிகளையும் தொலைவுகளையும் துரத்தி,
வரும் மரணங்களிலிருந்தும்
காப்பாற்றி விடுமோ அச்சுகம்?
விளக்கு வந்துவிட்டது.
கேள்வியும் அதன் பயந்தரும் அவசியமும்
தள்ளிப் போடப்படும்.
இற்றுப் போன இரவை மறுபடி
செப்பணிடுவது முதல் அவசியமாகிறது.

கவலை!

தெரிந்தும் புரியவில்லை,
எல்லாம் மக்கிப் போகின்றன;
ரத்தம் படிந்த கற்கள்;
ஆற்றினுள் என் பாதங்களின்
விசித்திர மீன் வெண் தவழ்தல் -
சதை வளர்த்த கூழாங்கற்கள்.
தண்ணீரில் மூழ்கி இறக்காமல்,
நான் அடுத்து எங்கே போக வேண்டியிருக்கிறது?
அர்த்தத்தைத் தொடப் போவதில்லை
(அடைவதை விட்டு விடுவோம்);
குழந்தைக்கு 9வது வாய்ப்பாடு
சொல்லித் தரவேண்டும்....
இஞ்ஞாயிற்றுக்கிழமை

இரும்பு உண்மைகள்!

ஒட்டடை வானத்தில்
எதிர்பார்ப்புடன் நட்சத்திரச் சிலந்திகள்;
உலகம் தன் குழந்தைகளை
தனது உஷ்ணப் பள்ளங்களுக்கு வரவேற்கிறது;
எனினும், எனது இரும்பு உண்மையில்
நான் சஞ்சரிக்கிறேன்.
(அவையவைகள் தம் உண்மையிலிருப்பது போல)
என்பதை உணர்வதற்கே
இந்த இரவில்
இச்சிறு வீதியில்
நான் நடந்து கொண்டிருக்கிறேன்.

சில ஜீன்கள்!

நான் உணரும் பாகையில்
இப்பயணம் தன்
மேலெழுந்தவாரியான போக்கிடங்களை
நிராகரிக்கிறது.

மழை தன் உயரக் குச்சுகளின் மேல்
உட்கார்ந்தவாறு
நடுங்குகிறது.

இப்புல்லுக்கு இன்னும் பச்சை தேவை;
கிழிந்த வேலியொன்று ஏர் அறியா இந்நிலத்தின
அங்கங்களைப் பூட்டியிருககிறது;
ஓடிப் போனவனின் கொடி இங்கு பறக்கிறது;
தற்காபப்புக் கண்கள் குருடாகின்றன;
அந்தியின் பசை சமமான பூமியின் மேல்
அதைதியாக உலர்கிறது.

என் வெட்ட வெளிகளின் மீது
சில ஜூன் மாதங்கள்
நிற்கத் தகுந்த தாரகைகளை சிருஷ்டிக்க
இந்த இரவால் உந்தப்படுகிறேன் நான்!

ஏரி விடியல்!

நிழல் தன்னுள் கலந்த
ஒளித் திட்டுகளைக் கடைந்தெடுத்து
வெண் பறவை இறகுகளில் ஒன்று சேர்க்க,
அகல் மலர்கள் மெல்லிய ஜுவாலை விடுவிக்கின்றன.
எட்டு வயது மார்கழிக் காலை
தன் வெளிர்ப் பாதங்களை
ஏரியின் இடுக்குகளில் புகுக்குகிறது.
நேற்றைய மாலை மொட்டுகளைக் கொண்டு
உதயம் இன்றைய உலகு செய்திருக்கிறது.

சின்னப் பெண்ணே, ஒளிச் சில்லுகளைப் பொறுக்கி
எந்த மனத்தினுள் நிரந்தரமாக
ஒளிக்க முயல்வாய்?
சூரியப் பள்ளத்தாக்கு விரிய,
அழகின் மிகை அழகைச் சொல்லு முன்னர்
இயலுமோ?
மல்லிகை மிதிபடும் கூட்டு ரோட்டுக்கருகில்
ஆயிரம் துளி மீன் உதயங்களுடன்
நகரம் நகர்கிறது,
சிறு உதயக் கொப்பளங்கள் வெடிக்கின்றன;

உலகிற்கு அப்பாற்பட்டது உலகினுள் உறைவதை
உணர்த்தத் தானோ இந்த ஏரி விடியலுக்கு
நீ இவ்விடம் என்னை அழைத்திருக்கிறாய்?
படகுகளைக் கருதி!
படகுகள் அந்தக் கடலோரத்தில்
குப்புறப் படுத்துக் கிடக்கின்றன,
தம் காம்புகளை மண் வாயில் திணித்தவாறு.

வெண் அலைகளுக்கருகில்
நடக்கும் நான்
கடலுக்கு மட்டுமன்றி
படகுகள் கரைக்கும் தான் சொந்தம்
என்று சிந்திக்கிறேன்.

குற்ற விசாரணை!

வீதிக்குழந்தையின் செம்பட்டை முடி
தேன் நிறம்
சினிமா போஸ்டர் அவர்களின்
பல்கலைக்கழகம் -
மாருதி ஆயிரங்கள், குப்பை லாரிகள்,
பாட்டில் விளிம்புகளை உடைக்காத
கோக் கேசுகள்,
புரண்டோடும் வீங்கிய சாக்கடைகள்,
வறுமைப் பாசியில் வழுக்கிய குழந்தைப் பருவங்கள் -

தனிப்பட்ட சோகங்கள் கூட
இவ்வுலகிற்கு இன்றயிமையாதவை போல் -
ரயில் ஜன்னல், காற்றுக்காக
ஆனால், ஜன்னல் கம்பிகளின் கீழ்
ஊர்ந்து செல்லும் மழைநீர்
என் முழுக்கைச் சட்டையை ஈரப்படுத்துமானால்,
என் கையைச் சற்று விலக்கிக் கொள்வேன்.

நமது நெஞ்சாழங்களின் சில
முகவரிகளில் வரப்பெற்ற கடிதங்களுக்கும்
நாம் தெரிந்தே, பதில் எழுதத் தவறி விடுகிறோம்.

மழைக்கால நதிகள்
மழைக்காலம் வந்தால
நாங்கள் மூவரும்
எங்கள் நகரத்தின் அருகாமையில்
நெளியும் அந்த நதியில்
எங்கள் கால்களை நனைக்கிறோம்.

படகில்லாத் துடிப்புகள் போல்
துழாவும் எங்கள் கால்கள்
அச்சமயம், நாங்கள் இதுவரை கவனிக்கத் தவறிய
இரண்டு எலும்புப் புதிர்களாகின்றன.

நிரந்தர நிம்மதி!
நிரந்தரமான நிம்மதிக்குப்
பல விலாசங்கள் உள்ளனவாம்
பலர் சொல்கிறார்கள்,
பத்திரிகையில் எழுதுகிறார்கள்.

இந்த விலாசங்கள் சிலவற்றில்
விசாலங்கள் கூட;
மலைக்குப் போ;
கை காட்டுகிறார்கள் மெதுவாக
முனிசிபாலிடி நம்பர் கொண்ட
மிகத் தெளிவான விலாசங்கள் அநேகம்.
ரயில் மற்றும் பஸ் ரூட்டுகளெல்லாம்
ஆசிரமத்தைத் தொடுகின்றன
என்கிறார் ஒரு ரிங் பக்தர்.

சாதாரண மாந்தர்
அசாதாரண முனைப்புடன்
மலைகளுக்கும்
சிலைகளுக்கும்
படை எடுத்த வண்ணம்.

நல்ல வேளை,
எனக்காக என் மனதில்
நானே நிறுவியிருக்கும் ஆசிரமத்திற்கு
பஸ் ரயில் ரூட்டுகள் ஏதும் கிடையாது.

புரட்சி!

சத்தியத்திற்குத் தயாராகுங்கள்.

நேற்றைய நிலவு கூட
குறிப்பிட்ட ஒரு தருணத்தல் தான்
நம்மூர்க் குளத்திற்குக் தீ வைத்தது.

உண்மைக்கென்று
உன்னதமான நிமிடங்கள்
சிற்சில விபத்துகளில்
சிருஷ்டி ஆகின்றன;
அப்போது அடைக்கப்பட்ட உண்மை
தன்னைத்தானே விடுதலை செய்து கொள்கிறது;
அச்சுற்றுலாக்களின் மூலம்,
ஏழு தலைமுறைக்கு
தர்மம் கிடைக்கப் பெறும்.
சத்தியம் எவன் கைப் பிரம்பாகிறது -
பிரம்பாகி அயர்ந்தவனைத் தாக்குகிறது?
சத்தியம் தன் கருவிகளைத் தானே

தயாரித்துக் கொள்ள வல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...