ஞாயிறு, 29 மே, 2016

கவிதைகள்-கணேஷ் கிருஷ்ணமூர்த்தி



முருகா!
சுயசுதந்திரம் சிறைப்படுத்துகிறது.

பாதிக்கப்பட்டவர் எல்லோரும்
என் மனத்தின் சபையில் ஒன்று கூடி
என்னைச் சாடுகிறார்கள்;
நியாயமான முழக்கங்கள் அவர்களுடையது;
நான் சுய மன்னிப்பைத் தேடுகிறேன்.
இப்படியா, செய்வான் ஒரு மனிதன்!
என்கிறார் ஒருவர் தேநீர் அருந்திக் கொண்டே...

நீங்கள் சொல்லும் அம்மனிதன் நானில்லை.
என்னைத் தெரிந்தவர்கள் திடீரென்று
மொத்தமாகக் காணாமல் போகிறார்கள்.

நான் அப்படிப் பட்டவன் இல்லை.

பாவத்தின் சம்பளம் சுதந்திரம்
நான் சற்று விரைவாக
நான் அப்படியில்லை என்கிறேன்
எவனோ மாட்டிக் கொண்டான்
அவர்கள் சொல்லும் அம்மனிதர்கள்
நாம் யாவரும் இல்லை.

முருகா என்ற சொல் ஆழமானதொன்று
என்றறிகிறேன்.

குருவி சர்ச்சை!
குருவியே!
வா, வந்து இக்கிளையின் மேல் உட்காரு
நீ யார் என்று தெரிந்து கொள்ளலாம்.
(அல்லது எது நீ என்று),
உன் சிறகைப் பற்றி,
உன் உருண்டை வாஷர் கண்களைப் பற்றி,
உன் துள்ளும் தலையைப் பற்றி,
நகத்தால் ஆனது போல் உள்ள
உன் அலகினைப் பற்றி;
பாடு
நீ படும் பாட்டை -
எனினும், என்னால்
ஊகிக்கத்தான் முடிகிறது
உன் மனத்தைப் பற்றி -
மனம் என்று ஒன்று
உனக்கிருந்தால்.

உறங்கும் பூனை
பூனைக்குட்டியே,
அடுத்து என்ன செய்யப் போகிறாய்?
அல்லது என் பார்வையில்
தூங்கிக் கொண்டே இருக்க உத்தேசமோ?
வேறு எதாவது செய்யேன்,
இந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் மேல்
உன் உறக்கத்திற்கு
சீதோஷ்ண நிலை
கச்சிதமாக இருப்பினும்.

உன் பேராசை மூஞ்சுறுகள்
தாவட்டும்;

பக்கத்துக் கட்டிடத்துக்குத்
தாண்டு பார்க்கலாம்;
சரி போகட்டும்; படுத்தவாறு
ஏதாவது அசிங்கமாகவாவது
செய்யேன்;
உதாரணமக, நாக்கைக் கொண்டு நீயே
உன் ரகசிய உறுப்புகளை...
உன் மொத்த ப்ராபல்யமான
திருட்டுத்தனமும்

இப்படியா
சாதாரணமாக,
மனித வகையில்,
தூங்க வேண்டும்.

திகிலூட்டாத,
அலுப்பூட்டும்,
பாதகமற்ற,
நன் நடத்தை கொண்ட,
கொடிய ஜந்துவே,
உன் பூனைத்தனம் என்னவாயிற்று?

எனினும் -
சாந்தி உன் முக்கிய குணாதிசயம்,
நட்சத்திரங்கள் போல் நீ
பகலில் தேய்ந்து
மறைக் கூடியவன்,
எல்லாவற்றிற்கும மேலாக,
மன நிறைவு கொண்டவன் நீ,
குற்றவுணர்வு அறவே அற்றவன்,
என்ற தகவல்களையெல்லாம்
நான் சற்றே நினைவு கொள்வேனாயின்,
உறங்கும் உன்னைக் கண்டு வியப்படைவேன்
விவேகத்துடன்...

கிளி ஞாபகம்!
பச்சைக் கிளியே
உனக்கு நான் பட்ட கடன் எத்தனை -
குழந்தை அன்னம் உண்ணும் படலத்தில் உதவிட
அம்மாவால் அழைக்கப்பட்டு,
நீ அந்நாடகத்தில் முக்கிய பங்கேற்று
உன் பாத்திரத்தை
என் சாதப் பாத்திரம் காலி ஆகும் வரை
எவ்வளவு அழகாச் செய்து கொடுத்தாய் -

என் வயிறு நிறைய உன் நினைவுகள்
உன் கிறீச்சிடும் இலைகள்
உன் அழகு நங்கையான சிறகடிப்பு
மஞ்சள் வட்டத்திற்குள் உன் கண் வழிகள்
மாமரத்தின் நாக்கு நீ.

அன்றைய தோட்டத்தில் நீ
எனக்கு நல்கிய சாந்தி
என்று குலைந்தது?
அன்று தொலைத்த உன்னை எந்நாள்
எக்கானத்தில் மறுபடி காண்பேன் நான்.

உடமைகள்!
சுள் என்ற வெய்யிலில்
காய்ந்த நான்,
வியர்வை கொட்ட,
அகம் அடைந்து,
ஆடை களைகிறேன்.
(கோடை மாதங்களில் நிர்வாணம்தான் நிம்மதி)

அனேக பொருட்கள்
அவிழ்கின்றன,
கவிழ்கின்றன
என் சரீரத்திலிருந்து -
கைக் கடிகாரம்
குண்டாக பர்ஸ்
(அநேக காகிதக் குறப்புகள் அதனுள்)

கைக்குட்டை,
கருப்புக் கண்ணாடி,
சிகரெட்டுகள்,
தீப்பெட்டி,
சில்லரைகள்,
மாத்திரைகள்,
ஸ்கூட்டர் சாவி,
வீட்டுச்சாவி,
ஆபிஸ் அலமாரிச் சாவிகள்;
பேனா,
சட்டைப் பை விலாசப் புத்தகம்,
இன்று நான் வாங்கிய பென்சில் பேட்டரிகள்...

ஒரு சாதாரண நாளில்
நான் லாவகமாக, மேலும் கீழும்
சுமந்து செல்பவ¬ இவை;
என் சின்னஞ்சிறு உடமைகள்;
வெற்றுப் பொக்கிஷங்கள்,
அன்றாட என் அடையாளங்கள்,
என் குருட்டு சிசுக்கள் -
இவ்விநாடி தாங்க முடியாத சுமைகளாகின்றன;
வியர்வை கொட்டுகிறது,

உடம்பு வேகிறது
சட்டையை அவிழ்க்கிறேன்;
முடிவில், நாம் அனைவரும்
நம் உடமைகைளைக் கழற்றி எரிய நேரிடுகிறது.
வெறுமனே தகனம் செய்யப்படுகிறோம்.
அச்சுதந்திரத்திற்கு மனம் சற்று முன்னரே
ஆயத்தம் செய்து கொண்டால் என்ன
என்று எனக்குத் தோன்றுகிறது இந்நிமிடம்.

அப்பா!
அப்பா நீலாங்கரை வீட்டில் இல்லை,
என்னுடன் பம்பாயில் இல்லை,
லதாவுடன் டெல்லியில் இல்லை,
பூனாவில் கௌரிவுடன் இல்லை.
அமெரிக்காவில் உஷாவுடனோ, ஸ்ரீதருடனோ
அல்லது கனடாவில் ப்ரியாவுடனும் இல்லை;
அப்பா எந்த விமானத்திலோ, காரிலோ
பிரயாணம் செய்த நிலையில் இல்லை
அப்பாவைக் காணவில்லை, எங்கும் காணவில்லை;
அப்பா இறந்து போய்விட்டார்!

அப்பாவுக்கு இவ்வுலகம் பிடித்திருக்கிறது
இவ்வுலகின் சௌகரியங்கள் அவருக்குப் பிடிக்கும்;
சிந்தனை எனும் கவலை, வாழ்வு நமக்களிக்கும் கனி;
சொர்க்கங்கள் இக்கவலையின் பரிசுகள்;
இச்சௌகரியங்கள் செய்யும் சிபாரிகளின் பேரில்
நமக்கு ஆன்மிகம் கிடைக்கப் பெறுகிறது -
நூல் பந்தும் பூனையும், நாங்களும் அப்பாவும்
யமுனா நதியை எனக்குப் பிடிக்கவில்லை,
தண்ணீர் மண்ணீராய் இருக்கிறது

குழிவிட்டு விரைந்தபோதும்,
அச்செப்டம்பர் மாதத்தில்
துர்நாற்றம் ஒன்று கல்பிள்ளையார் போல்
அந்நதியில் அமர்ந்து கொண்டிருந்தது;
யமுனையின் ஒரே சமீபப் புனிதம்
அப்பாவின் சாம்பலைத் தாங்கிக் கொண்டிருந்தது:
கிருஷ்ணர்கள் கைவிட்ட யமுனை -
அப்பாவின் அஸ்தி, நதியைப் புனிதப்படுத்தட்டும்!

அப்பா எரிந்தாகி விட்டது,
அவர் சாம்பல் யமுனையில் அமிழ்ந்தாகி விட்டது,
இனி தாஸ்தாவேஜ்களிலும், புகைப்பட ஆல்பங்களிலும்தான்
அப்பாவின் நினைவு.

(நம் நினைவில் அவர் வாழ்கிறார்
என்று சொல்லி வைக்கலாம்;
ஆனால் நினைவு ஓட்டைப் பெட்டியாயிருக்கிறது)
பல நாட்டுப் பயங்கொள்ளிகள்
ஒன்று சேர்ந்து ஒரு நினைவைச் செய்தார்கள்;
ஒரு சுவர்க்கத்தையும், மறுபிறப்பையும், சமூகத்தையும்
தத்துவத்தையும், தவங்களையும் சித்தரித்தார்கள்
அவ்வுலகத்தின் சமஸ்க்ருத நெடியில் அப்பாவா?
அப்போலி சுவர்க்கம் என்னுடைய அப்பாவிற்கா?

நாம் தனிமையில், இவ்வுலகம் எனும்
திறந்த வெளியினை
கவலைகளால் பேணப்பட்டும், விடுவிக்கப்பட்டும் -
அப்பா இந்த சுவர்க்கத்தை விட்டுப் போய்விட்டார்
அவர் இருப்பது இப்பொழுது இல்லாமையில்,
ஒன்றுமில்லாமையில், உணர்வற்றறு உலோகமாய்;
அவர் விடடுப் போன வாழ்வையும் சேர்த்து
அவரை மதித்த, காதலித்த நான் வாழவிரும்புகிறேன்.

ஐஸ் கட்டி!

கண் சுவைக்கிறது,
நக்குகிறது
ஐஸ் கட்டியின்
அடிப்படையில் இருண்ட
இதயத்தை;
அதன் குகைகளில்
நிழல்கள் -
துல்லியமாக
வருவல்
பல்புகளுக்கடியில்,
ஆழ்ந்து, கருத்த
ஐஸ் கட்டியின்
உடல்
அதன் கர்ப்பக்கிருஹத்தினுள்
நிர்வாணத்திலும்
தன் கற்பை
நேர்த்தியாகக்
கட்டிப் பிடித்துக் கொண்டு
ஐஸ் கட்டி
கருமையில்
இறுக்கமாகப்
போர்த்திய தன்
அந்தரங்கத்தில்
இறப்பில்லாமல்
இன்று;
கண்ணீர் வடிக்கும்
எனினும், கடினமான
சற்றே விரல் பிடி நழுவும்,
அதனின் அதனுள்
சுய அரவணைப்பு;
சதுரத்தின்
உருண்டைக் குணம்,
கண்ணை
அபகரித்து
அபரிமிதத்தில்
அழிக்கவல்ல
தன்னிச்சையற்ற
பெண்ணின்
யௌவனத்துடன்
அதன் நெரிசல் ஆழங்கள்
கடலினுடையதாய்,
அதன் குழுமியுள்ள சேறு
வானினுடையதாய்,
அதன் இருண்ட கரையின் குளுமை
குழந்தைக் கண்களுடையதாய்,

ஒரு நகரம்,
ஒரு விண்,
ஒரு உயிர்.
கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸுக்கு முன்தினம்
யேசுவை யோசிப்பதில்,
வெண் சர்க்கரைத் துகள்கள்
அன்ன நீர் வீழ்ச்சியாகிறது,
ஓர் குழந்தை உள்ளங்கையிலிருந்தும்.

புறநகர் மின்சார ரயில்
அலுப்புக் காட்சிகளைத் துடைத்து
விரைய
இதுவரைத் துவண்டவை
அழிக்கப்பட்டு (பார்வைப் பலகையிலிருந்து)
அந்த விநாடியன் முடிவில், ஜன்னல்
புல்லின் பச்சை போகங்களில்
படுத்திருக்கும் சூரியனைக் கொண்டு
நிரம்புகிறது.

சுவர்க்கத்திற்கு நம் விடுமுறை
பிரயாணங்கள் துவங்கட்டும்;

மனித வாசனை
நான் அன்று அக்சா கடற்கரையில்
சந்தித்த யேசுவிடமிருந்து திரவியமாக
ஒழுகுகிறது;
மண் தீவில்
மீன் அவனுடைய சுவாசம்;
மூழ்கிச் சாகிற என் கால்களைப்
பற்றும், காப்பாற்றும் அன்பாற்றல் அவனுடையது -
யேசு என் மனைவி.

ஆழ்கடலின் கீழ்
உறங்கும் திட மணல்,
ஆழ்க்கடலில் திறந்த கண்களுடன்
தூங்கும் மீன்களுக்கடியிலும் உறங்கும்
திட மணல்;
எது எப்படியென்றாலும், சுழலும் நம் உலகிற்கு
எந்த துர்முடிவு நேர்ந்தாலும்,
கிறிஸ்துமஸ் வர உள்ளது
நெஞ்சத்தில் அகல் ஏற்றி
நாம் மகிழ்தற்கு.

பதில்!
நான் நிறைய பேசுபவன்,
அவள் கொஞ்சம் சொல்பவள்

ஒருமுறை, காதலெச்சிலைக் கொண்டு
ஒட்டப்பட்ட
கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன் -
பதில் இல்லை;
மற்றுமொரு கடிதம் எழுதினேன்
மறுபடி ஒன்று .
(சிவப்புத் தபால்பெட்டி
அவள் செவ்துட்டு நிறம்) -
மற்றும் ஒருமுறை எழுதி,
அக்கடிதத்தை அஞ்சல்பெட்டியில்
சேர்ப்பிக்கவில்லை.

(தபால் பெட்டியில் நமக்கு
நம்பிக்கை போகுமெனில்
அனைத்து நம்பிக்கைகளும் தளர்கின்றன)

வெகுநாள் கழித்து
ஒருநாள், அவள் வந்தாள்
(என்னுடைய படிப்பறையிலிருந்து என்று ஞாபகம்)
நான் எழுதிய அத்தனைக் கடிதங்களையும்
மடித்து அவள் தன் கூந்தலில் செருகியிருந்தாள் -
ஏய், உன் கடிதங்களுக்கு
பதிலாகத்தான் நான் வந்திருக்கிறேன் என்றாள்

நான் நிறைய பேசுபவன்
அவள் கொஞ்சம் சொல்பவள்

மும்பாய் காலை
காலை ஏழு மணி,
நகரத்தின் காதோரங்களில்
நரை விழுகிறது.
அதன் விரல்கள்
சிமெண்ட் விறைபிபில்;
அகண்ட கண்கள் கொண்ட
புறநகர் ரயில், ஏற்கனவே
பலமணி நேரங்களாகத்
தனது பருத்த இடைகளை அசைத்து
நகர்ந்து கொண்டிருந்திருக்கிறது;
பள்ளிக் குழந்தைகளின் படுக்கைகளின்மேல்
சூரியக் கதிர்களின் மிருதுவான குளம்புகள்;
கடற்கரைத் தொட்டிலில்
உயிரில்லா அழுக்குகள்
இன்னும் தாலாட்டப்படுகின்றன;

சந்தையின் மத்தியில் தனது
விமோசனத்தை மறுபடி
தேடத் துவங்கும் நகரத்துடன்
நானும் சேர்ந்து கொள்கிறேன்!

கையெழுத்து
எங்கள் தீர்ப்பின் நிழலிற்குள்
உன்னைக் கொண்டு வருகிறோம்.
உன் நோட்டுப புத்தகத்தைக் காண்கிறேன்,
அசுத்தம் - குழந்தைத் தெளிவுடன்
எழுதப்பட்டிருக்கும் உன் மிஸ்ஸின் தீர்ப்பு -
உன் உதிரத்தின் மூலமும்
பங்காளியுமாக நான்
(உன் அசுத்தத்தையும் சேர்த்துத்தான்) -
உதிரம் அந்தரங்கமானது -
பிறப்பு, காயம், தீட்டு, ஆற்றுதல், வெள்ளைப்படுதல்
சம்பந்தப்பட்டது -
உன் ஆசிரியை சரிதான்
ஆனால், முழுவதும் தவறு.
வளர்ந்த மனிதன் மற்றொரு வளர்ந்தவரைப் பறி
இப்படித் தீர்ப்பளிக்கிறேன்,
நிதானமாக...

உன் கையெழுத்தின் வெளி வழிதலையும்
உழுதலையும், தளும்பல்களையும்
நான் வேறொரு
விளக்கில் காண்கிறேன்...

நீ எங்கள் ஒழுங்கு முறையை
எவ்வளவு தூரம் அனுசரித்திருக்கிறாய் -
அழித்தலும் திருத்தலும் கொண்டு,
உன் ஆசிரியையின் உலக நோக்கிற்காக உன்னையே
விட்டுக் கொடுத்திருக்கிறாய் -
நாங்கள் உனக்குப் படிதது வைத்த பாதையில்
நீ ஏற்கனவே பயணம் செய்யத் தொடங்கிவிட்டாய்!

உன்னை நீயே நிர்மூலமாகக் கருதவும்
எங்களை ஒழுக்கம் என்று கருதவும்
தொடங்கியிருக்கிறாய் -

உன் கையெழுத்து
தன் கரைகளை மீற முயன்று,
அலைகளாக மேலெழும்பி, நேச்சுவர்களைத்
தாண்டிக் குதித்துக் குமுறும் கடலாக
நான் பார்க்கிறேன்.

காடாக வளர்ந்த புல்லாக,
இரண்டு அத்துமீறக் கூடாத எங்கள்
கோடுகளை மீறிய உன் கையெழுத்து
எங்கள் உணர்வுகளுக்கு நிர்மூலம் -
நிர்மூலத்தை நிர்மாணித்த
நாங்கள் நிர்மூலத்தை நிராகரிக்கிறோம்.
எங்கள் தத்துவ சுத்தியல் கொண்டு
உன்னை ஓர் இடத்தில் அறைகிறோம்.
எங்களை மன்னித்து விடுதல் அவசியம் என் கண்மணி
ஏனெனில், நாங்கள் செய்வதறிபவர்.
முத்துக்காடு
நடப்பட்ட ஒரு முதலையாக ஈச்சமரம்
தன் முகவாயைத்திறந்து
தனது கூர்மையான பற்கைளக் காட்டி,
காற்றைப் பரிகசிக்க,
கடற்பறவைக்குத் தன்னிச்சை
தன் சிறகுகளைப் புறக்கணிப்பது தெரிகிறது.

மழை என் முகத்தில் சிற்றறம்மை
வார்க்கிறது.
கார் ஒன்று தனித்த மிருகமாகி,
கரையின் மண் மடிப்புகளினூடே,
மண்டியிட்டு முன்னேறுகிறது.
இப்படிப்பட்ட நாள் ஒன்றின் விடுதிகளில்தாம்
நாம் வசித்திருந்தோம்.
மழையை ஈரப்படுத்தி கடலுக்குள் விரட்டினோம்;
ஆயினும், கதாநாயகப் பாசாங்கு தெரிந்தே நடந்ததில்லை
உப்பின் மிரட்டலில் -
திக்கறற் நமது ஆத்மன், இளமையின்
ப்ராத்தனை தரும் வீரம் கொண்டு,
கடலின் அகோர தாடியையும் உசுப்பிப் பார்த்தது;
நல்விதியால் ஆக்கிரமிக்கப்பட்டும்,
அந்தக் கரையின் ஈர நிலையங்களால் தேற்றப்பட்டும்,
நாம் இருவர் நின்றிருந்தோம் என்று நினைவு.
தேகாலயம்
மனக் கயிறுகள்
சற்றே முடிச்சவிழ்க்கப்பட்டு
மனதே ணிஜி ஐப்போல் வேட்டையாடப்பட்டாலும்
அது அவ்விரவை ஆட்சி செய்கிறது;
சிறு வேதனைகள்
மகத்தான வெளிப்போதலையும் துன்புறுத்துகின்றன;
ஆனாலும், இதுமட்டுமே பூர்ண உண்மை ஆகாதுதான்.
நிறைய காதலும், பாடலும் வெறுமையும்
நடந்தேறி விட்டபோதும்.
நிஜத்தில்
எதுவுமே நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.
அவ்வெவ்வேறு கணக்கிலடங்கா இரவுகள் -
ஆடிய மனம், வாழ்வின் லாவக தேஜஸ் அனைத்தும்
அவ்வளவு தூரத்தில்...
இந்த மடக்குப் படுக்கையில்,
புண்ணற்று முடிவுறுகின்றன.

(விதையின் குணம் தெரியாமல் போவது
தொல்லைகளில் ஒன்று மட்டுமே)

அவ்வப்போது இருதயப் பரிசோதனைக் கருவிக்குமேல்
அதைச் சுற்றும் கிரணங்கள் போல்
வட்டமிடுவோரிடமிருந்து
நாம் என்ன பெற்றுக் கொண்டோம்,
அவர்களுக்கு நமது எவற்றை விட்டுச் செல்கிறோம்?

சின்னஞ்சிறு வினாடிகள் வெளியோடுகின்றன
பற்றிக் கொஞ்சப்படாத குழந்தை விரல்களைப்போல்...

தொலைவோ, வெறுப்போ, நம் மூச்சின் துர்நெடியோ,
உணர்வுப் பரிமாற்றம் தரும் மோக்ஷத்தை வரவிடாமல்
தடுத்துவிட்டன;

பீங்கான் பேசின்கள்,
படுக்கையறைக் கழிப்பு ஏனங்கள்
மிக்ஷி பாட்டில்களின் வௌவால் தொங்குதல்,
கடிதங்கள் - அனைத்தையும்
நம்மை அறியாத, தெரியாத ஊர் ஒன்றின்
யானையளவு ஒன்றுமின்மை விழுங்குகிறது
எத்தனை பேர் தொடமுடியாத தூரத்தில் -

பதைப்புடன், நம் நினைவை மீட்கக் கூடிய
ஏதோ ஒரு முகத்திற்குத் தேடுகிறோம்,
நாளை இரவும் எட்டு மணிக்கு நான் உன்னைச்
சந்திக்கிறேன் எனச் சொல்லத் துணியும் உதடுகளுக்காக
சாதாரண மற்றுமொரு காலை போதும்;

இறைவன் தனது தேகாலயம் காக்கட்டும்
என்ற இறுமாப்புடன்...
புனரபி ஜனனம் புனரபி மரணம்!

மகளின் மழை!
பெண் குழந்தை, எனது -
மழை கொணர்ந்திருக்கிறாள்.
வங்கக் கடல், இமாலயம்
அரபிக்கடல், விண்
இவையெல்லாம் என் பெண்ணின்
சேவகர்களாம்;

அங்குமிங்கும், சஞ்சலத்துடன்
உருண்டிருந்த மேகங்களை
ஒருங்கிணைத்து
தனது கரும்பார்வை கொண்டு
ஆழம் போதித்து,
இதோ நமது மாடிகளில், கோயில்களில்,
வீதிகளில், ரயில் பாதைகளில்,
குழுமிய மழை

விழுகிறபடிச் செய்துவிட்டாள்.

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...